Mohammed Shami: பிட்டாக இல்லை! தென் ஆப்பரிக்கா டெஸ்ட் தொடரிலிருந்து ஷமி விலகல் - தீபக் சஹாரும் இல்லை
பிட்னஸை நிருபிக்க தவறிய முகமது ஷமி தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் சென்றிருக்கும் இந்திய அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை தொடங்குகிறது.
ஒரு நாள் தொடருக்கு பின் இரண்ட டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் இடம்பிடித்திருந்தார். ஆனால் அவர் தற்போது பிட்னஸை நிருபிக்க தவறிய நிலையில் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனை பிசிசிஐ உறுதிபடுத்தியுள்ளது.
"தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பிட்னஸை பொறுத்தே பங்கேற்பதாக இருந்த முகமது ஷமி பிட்டாக இல்லை என பிசிசிஐ மருத்துவ குழு தெரிவித்துள்ளது. இதனால் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் அவர் விலகியுள்ளார்" பிசிசிஐ சார்பில் வெளியிடப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை தொடரின்போது முகமது ஷமிக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. தற்போது அந்த காயம் இன்னும் முழுமையாக குணமடையாமல் உள்ளது.
இதேபோல் ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக தீபக் சஹார் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தீபக் சஹாருக்கு மாற்று வீரராக ஆகாஷ் தீப் சங் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி ஜோகன்னஸ்பெர்க் வான்டர்ஸ் மைதானத்தில் நாளை இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக டிசம்பர் 26ஆம் தேதி சென்சுரியன் மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்