WPL 2024: ஷப்னம் துல்லிய பவுலிங்கால் தலை தப்பித்த குஜராத் ஜெயிண்ட்ஸ்! சிக்கலில் மாட்டிக்கொண்ட யுபி வாரியர்ஸ்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Wpl 2024: ஷப்னம் துல்லிய பவுலிங்கால் தலை தப்பித்த குஜராத் ஜெயிண்ட்ஸ்! சிக்கலில் மாட்டிக்கொண்ட யுபி வாரியர்ஸ்

WPL 2024: ஷப்னம் துல்லிய பவுலிங்கால் தலை தப்பித்த குஜராத் ஜெயிண்ட்ஸ்! சிக்கலில் மாட்டிக்கொண்ட யுபி வாரியர்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 12, 2024 04:00 AM IST

கட்டாயமாக வென்றாக வேண்டிய போட்டியில் யுபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தியிருக்கும் குஜராத் ஜெயிண்ட்ஸ் ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. சிறப்பாக பவுலிங் செய்த குஜராத்தின் ஷப்னம் எம்டி, யுபி டாப் ஆர்டரை நிலைகுலைய செய்தார்.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் குஜராத் வீராங்கனை ஷப்னம் எம்டி
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் குஜராத் வீராங்கனை ஷப்னம் எம்டி (PTI)

குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணி 6 போட்டிகளில் 1 வெற்றி மட்டுமே பெற்றிருந்த நிலையில் கட்டாயமாக வென்றாக வேண்டிய போட்டியாக இந்த ஆட்டம் அமைந்திருந்தது.

குஜராத் பேட்டிங்

இதையடுத்து டாஸ் வென்ற குஜராத் கேப்டன் மூனி பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. ஓபனர்களாக களமிறங்கிய லாரா வோல்வார்ட், பீத் மூனி ஆகியோர் தவிர மற்றவர்கள் பெரிதாக பேட்டிங்கில் பங்களிப்பு அளிக்கவில்லை.

வோல்வார்ட் - மூனி ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டு 60 ரன்கள் சேர்த்தனர். வோல்வார்ட் 30 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அவுட்டார். இவரை தொடர்ந்து களத்தில் இருந்த மூனி சிறப்பாக பேட் செய்து அரைசதமடித்தார்.

மற்ற பேட்டர்கள் வருவதும் அவுட்டாவதும் போவதுமாக இருந்த நிலையில் நிலைத்து பேட் செய்த மூனி கடைசி வரை அவுட்டாமல் இருந்தார். அவர் 52 பந்துகளில் 74 ரன்கள் அடித்திருந்தார்.

யுபி வாரியர்ஸ் பவுலிங்கில் சோஃபி எக்லெஸ்டோன் 3, தீப்தி ஷர்மா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். ராஜேஷ்வரி கெய்க்வாட், சாமரி அட்டபட்டு ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

யுபி வாரியர்ஸ் மோசமான தொடக்கம்

153 ரன்களை சேஸ் செய்ய களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணிக்கு, குஜராத் பவுலர்கள் அதிர்ச்சி அளித்தார்கள். முதல் 2 ஓவர்களில் டாப் 3 விக்கெட்டுகளை தூக்கினார்கள்.

யுபி வாரியர்ஸ் கேப்டன் அலிசா ஹீலி 4, கிரண் நவ்கிரே, சாமரி அட்டபட்டு ஆகியோர் டக் அவுட்டானார்கள்.

தீப்தி ஷர்மா அதிரடி

4 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த யுபி வாரியர்ஸ் தடுமாறியபோது களமிறங்கிய தீப்தி ஷர்மா, விக்கெட் சரிவை தடுத்து ரன் குவிப்பில் ஈடுபட்டார் . இதற்கிடையே கிரேஸ் ஹாரிஸ் 1, ஸ்வேதா ஷெராவத் 8 ரன்கள் அடித்து ஏமாற்றினர்.

ஒற்றை ஆளாக ரன் சேஸிங்கில் ஈடுபட்ட தீப்தி ஷர்மா அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர்கள் என அடித்த நிலையில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். இவருடன் இணைந்து சிறப்பாக பார்னர்ஷிப்பில் ஈடுபட்டார் பூனம் கெம்நார்.

ஒரு கட்டத்தில் தேவைப்படும் ரன்ரேட் அதிகரித்த நிலையில், தீப்தி - கெம்நார் ஜோடி அடித்து ஆட முயன்று பலன் அளிக்காமல் போனது. ஆட்டத்தின் கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார் தீப்தி ஷர்மா. இறுதியில் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே யுபி வாரியர்ஸ் எடுத்தது.

குஜராத் ஜெயிண்ட்ஸ் பவுலர்களில் ஷப்னம் எம்.டி வெறும் 11 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். கேத்ரின் பிரைஸ், ஆஷ்லே கார்ட்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

துல்லிய பந்து வீச்சால் யுபி வாரியர்ஸ் டாப் ஆர்டரை காலி செய்த ஷப்னம் எம்டி ஆட்ட நாயகி விருதை வென்றார். கட்டாய வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியில் வென்றதோடு ப்ளே ஆஃப் வாய்ப்பையும் இழக்காமல் கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளது குஜராத் ஜெயிண்ட்ஸ். 

அத்துடன், குஜராத்தின் வெற்றியால் யுபி வாரியர்ஸ் அணி சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது. தற்போது 3 வெற்றி பெற்ற போதிலும் மீதமுள்ள போட்டிகள் அனைத்திலும் நல்ல ரன் ரேட்டுடன் வெற்றி பெற்றாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இன்றைய போட்டி

இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் - ஆர்சிபி மகளிர் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் மகளிர் ப்ளேஆஃப்புக்கு தகுதி பெற்றிருக்கும் நிலையில், 3 வெற்றிகளை மட்டும் பெற்றிருக்கும் ஆர்சிபி அணிக்கு முக்கியத்துவம் மிக்க போட்டியாக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.