PBKS vs DC Result: இந்த சீசன் முதல் அரைசதமடித்த சாம் கரன்! பவுலர்களால் தோல்வியை தழுவிய டெல்லி
பவுலிங்கில் பங்களிப்பு தராவிட்டாலும் பேட்டிங்கில் பொறுப்புடன் விளையாடி அரைசதமடித்த சாம் கரன் பஞ்சாப் அணி வெற்றி பெற காரணமாக அமைந்துள்ளார். பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கிய பவுலர்கள் டெல்லி அணி தோல்வியடைய காரணமாக அமைந்தனர்.
ஐபிஎல் 2024 தொடரின் இரண்டாவது போட்டி பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. பஞ்சாப்பில் புதிதாக திறக்கப்பட்டிருக்கும் முல்லான்பூர் கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடந்தது.
விபத்தில் சிக்கி காயமடைந்து, குணமான பின்னர் ரிஷப் பண்ட், டெல்லி கேபிடல்ஸ் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக இந்த போட்டியில் ரிட்டர்ன் ஆனார். அதேபோல் காயத்தால் கடந்த சீசனை மிஸ் செய்த ஜானி பேர்ஸ்டோவும் இந்த சீசனில் பஞ்சாப் அணியில் களமிறங்கினார்.
இம்பேக்ட் வீரர் அபிஷேக் போரல் அதிரடி
முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. இம்பேக்ட் வீரராக களமிறங்கி ஆட்டத்தின் கடைசி ஓவரில் 25 ரன்களை விளாசி தள்ளினார் அபிஷேக் போரால். அவர் 10 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். தனது இன்னிங்ஸில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களை அடித்தார்.
பஞ்சாப் சேஸிங்
இதைத்தொடர்ந்து சேஸிங்கில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. ஓபனராக களமிறங்கிய அணியின் கேப்டன் ஷிகர் தவான் தொடர் பவுண்டரிகளுடன் ரன் குவிப்பில் ஈடுபட்ட நிலையில், 22 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தொடர்ந்து மற்றொரு ஓபனரும் அதிரடி பேட்ஸ்மேனுமான ஜானி பேர்ஸ்டோ 9 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார்.
அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப்புக்கு பார்ட்னர்ஷிப் ஆட்டம் தேவைப்பட்டது.
பொறுப்புடன் பேட் செய்த கரன் - பிரப்சிம்ரன் சிங்
இம்பேக் வீரராக களமிறக்கப்பட்ட பிரப்சிம்ரன் சிங், ஆல்ரவுண்டர் சாம் கரன் ஆகியோர் பார்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்தனர். நன்றாக விளையாடி வந்த பிரப்சிம்ரன் சிங் 26 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்
முதல் அரைசதம்
மறுமுனையில் அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து நிதானமாக பேட் செய்த சாம் கரன் அரைசதத்தை அடித்தார். இதன் மூலம் இந்த சீசனின் முதல் அரைசதத்தை அடித்த வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கிடையே ஜித்தேஷ் ஷர்மா 9 ரன்னில் வெளியேற, அவரை தொடர்ந்து வந்த லியாம் லிவங்ஸ்டன் பொறுப்புணர்ந்து பேட் செய்தார்.
சாம் கரன் 63 ரன்களில் ஆட்டமிழக்க டெல்லி பக்கம் ஆட்டம் திரும்பியது. அப்போது களத்தில் இருந்த லியாம் லிவிங்ஸ்டன் கொஞ்சம் அதிரடியை வெளிப்படுத்தி ஆட்டத்தை பஞ்சாப் அணி பக்கம் கொண்டு வந்தார்
பஞ்சாப் வெற்றி
ஆட்டத்தின் 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து பஞ்சாப் கிங்ஸ் வெற்றியை பதிவு செய்தது. லியாம் லிவிங்ஸ்டன் 38 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதுவரை நடந்து முடிந்திருக்கும் இரண்டு போட்டிகளிலும் சேஸிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன.
ரன்களை வாரி வழங்கிய டெல்லி பவுலர்கள்
டெல்லி அணி பவுலர்களில் மிட்செல் மார்ஷ் 4 ஓவர்களில் விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் 52 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அதேபோல் கலீல் அகமது 2 விக்கெட்டுகளை எடுத்த போதிலும் 43 ரன்களை விட்டுத்தந்தார். இருப்பினும் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் சிக்கனாக பந்து வீசி 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை அள்ளினார்.
அதேபோல் பவுலிங்கில் ஒரு ஓவர் மட்டும் வீச 10 ரன்களை கொடுத்த பஞ்சாப் ஆல்ரவுண்டர் சாம் கரன், பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு அரைசதமடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.