SA vs IND 2nd ODI: ‘தரமான பந்துவீச்சு..’: 211 ரன்களில் சரணடைந்தது இந்தியா
India Innings: இந்திய அணி சார்பில் சாய் சுதர்ஷன், கேப்டன் கே.எல்.ராகுல் ஆகியோர் மட்டுமே அரை சதம் விளாசினார்.
இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணி 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 211 ரன்களில் சுருண்டது. இதையடுத்து, 300 பந்துகளில் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென் ஆப்பிரிக்கா விளையாடவுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் Gqeberha-இல் நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் ரிங்கு சிங் அறிமுகமானார். odi இல் இந்திய அணிக்காக முதல்முறையாக களமிறங்குகிறார் ரிங்கு சிங். இவருக்கு சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் தொப்பியை வழங்கினார்.
அடித்து ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் 4 ரன்களில் எதிர்பாராதவிதமாக ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து திலக் வர்மாவும் நடையைக் கட்டினார். எனினும், தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்ஷன் நிதானமாக செயல்பட்டு அரை சதம் பதிவு செய்தார்.
பின்னர், அவரது விக்கெட்டை வில்லியம்ஸ் எடுத்தார். பின்னர் கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். எனினும், இந்த ஜோடியை ஹென்றிக்ஸ் பிரித்தார்.
அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட் விழுந்தது. கே.எல்.ராகுல் அரை சதம் விளாசி ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இவ்வாறாக 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 211 ரன்களை மட்டுமே இந்தியா எடுக்க முடிந்தது.
பர்கர் 3 விக்கெட்டுகளையும், ஹென்றிக்ஸ், கேசவ் மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.