Ambati Rayudu: சிஎஸ்கே அணியில் ரோகித் ஷர்மா, அதுவும் கேப்டனாக..! அம்பத்தி ராயுடு சொன்ன விஷயம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 ஐபிஎல் கோப்பைகளை பெற்று தந்தவர் தோனி. இவரது ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியை மும்பை இந்தியன்ஸ் வீரர் வழிநடத்த வேண்டும் என கைகாட்டியுள்ளார் அம்பத்தி ராயுடு.
ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ். ஐந்து முறை சாம்பியன் படத்தை வென்றிருக்கும் சிஎஸ்கே அணி, 5 முறை ரன்அப்பாகவும் வந்துள்ளது.
சிஎஸ்கே அணியை முதல் சீசனில் இருந்து தற்போது வரை எம்எஸ் தோனி கேப்டனாக வழிநடத்தி வருகிறார். கடந்த முறை சாம்பியன் படத்தை வென்ற சிஎஸ்கே அணி இந்த முறை நடப்பு சாம்பியனாக களமிறங்குகிறது.
ஐபிஎல் தொடரில் 2016, 2017 ஆகிய சீசன்களை தவிர, இதுவரை 14 தொடர்கள் விளையாடியிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் தோனிக்கு 42 வயதாகும் நிலையில் அவர் அநேகமாக இந்த சீசனில் ஓய்வு பெறலாம் என கூறப்படுகிறது.
சிஎஸ்கேவுக்கு கேப்டனாக ரோகித் ஷர்மா
தோனி ஓய்வு பெற்றுவிட்டால் அணியை வழிநடத்துவது யார் என்ற கேள்வி குறித்து பலரும் பல்வேறு விதமான கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள், அந்த வகையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனுமான அம்பத்தி ராயுடு இதுகுறித்து கூறியதாவது:
" மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் ரோகித் ஷர்மா இன்னும் 5 முதல் 6 ஆண்டுகள் வரை விளையாடலாம். எனவே எதிர்காலத்தில் அவர் சிஎஸ்கே அணியில் விளையாட வேண்டும் என விரும்புகிறேன்.
அதுவும் அவர் கேப்டனாக செயல்பட்டால் உலகில் எந்த இடத்தில் போட்டி நடைபெற்றாலும் கோப்பையை வெல்வார் என நம்புகிறேன். 2025 சீசனில் அவர் சிஎஸ்கே அணிக்காக விளையாட வேண்டும் என விரும்புகிறேன். தோனி ஓய்வு பெற்ற பின் அவர் கேப்டனாகவும் செயல்படலாம்" என்றார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பாண்ட்யா கேப்டன்
மும்பை இந்தியன்ஸ் அணியில் தனது ஐபிஎல் கேரியரை தொடங்கிய ஹர்திக் பாண்ட்யா, இந்த சீசனில் மும்பை அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐந்து முறை ஐபிஎல் கோப்பை பெற்று தந்த ரோகித் ஷர்மா, இந்த சீசனில் சாதரண வீரராக களமிறங்குகிறார்.
பாண்ட்யா இதற்கு முன்னர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இரண்டு சீசன்கள் கேப்டனாக செயல்பட்டார் . அந்த அணி முதல் முறையாக களமிறங்கிய 2022 சீசனில் கேப்டனாக இருந்த பாண்ட்யா, ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்தார். இதைத்தொடர்ந்து கடந்த சீசனில் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்று ரன்னர்அப் பட்டத்தை வென்றார்.
மும்பை இந்தியன்ஸ் கேப்டன்சி
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் மாற்றம் குறித்து கருத்து தெரிவித்த ராயுடு, " இந்த சீசனிலும் மும்பை அணிக்கு ரோகித் ஷர்மாவே கேப்டனாக செயல்பட்டிருக்க வேண்டும். ஹர்திக் பாண்ட்யாவுக்கு அடுத்த ஆண்டு கேப்டன்சி பொறுப்பை கொடுத்திருக்க வேண்டும்.
ரோகித் ஷர்மா இந்திய டி20 அணிக்கு தற்போதும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். கேப்டன்சி விஷயத்தில் மும்பை அணி அவசரமாக முடிவெடித்திருப்தாகவே தெரிகிறது என்றாலும் எது சிறந்தது என்பது அவர்களுக்கு தெரியும்.
மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்துவது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. அங்கு நட்சத்திர வீரர்கள் ஏராளமானோர் உள்ளார்கள். எனவே அதிக அழுத்தம் இருக்கும். அனைவராலும் அதை கையாள முடியாது" என்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9