DC vs SRH preview: பேட்ஸ்மேனுக்கு சாதகமான பிட்ச்! சன் ரைசர்ஸ் அதிரடி பேட்டிங் லைன் அப் - டெல்லியிடம் இருக்கும் ஆயுதம்
விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் களமிறங்கும் முதல் போட்டியாக சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் அமைந்துள்ளது. அதிரடியான பேட்டிங் வரிசையை கொண்டிருக்கும் சன் ரைசர்ஸ் அணியை தனது துல்லிய பவுலிங் லைன் அப்பால் டெல்லி அட்டாக் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

ஐபிஎல் 2024 தொடரின் 35வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் - சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த சீசனில் டெல்லியில் நடைபெறும் முதல் போட்டியாக இருப்பதோடு, டெல்லி கேபிடல்ஸ் தனது சொந்த மண்ணில் விளையாடும் முதல் ஆட்டமாகவும் இது அமைகிறது.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன் டெல்லி கேபிடல்ஸ் 7 போட்டிகளில் 3 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திலும், சன் ரைசர்ஸ் 6 போட்டிகளில் 4 வெற்றியுடன் 4வது இடத்திலும் உள்ளது.
பண்ட் ரிட்டர்ன்ஸ்
விபத்துக்கு பின்னர் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் பண்ட் களமிறங்க இருப்பதால் மிக பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அவர் தனது பழைய பாணி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், உள்ளூர் ரசிகர்களிடம் பெறும் உற்சாகத்தால் அதை தொடர்வார் என நம்பலாம். இளம் பேட்ஸ்மேன்கள் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் நல்ல பார்மில் இருந்து வரும் நிலையில், கைவிரல் காயத்தால் அவதிப்பட்டு வரும் வார்னர் களமிறங்கினால் பேட்டிங் வரிசை நன்கு வலிமை பெறும்.