Ind vs Ban: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி..வலுவான நிலையில் இந்தியா..தோனியின் சாதனையை சமன் செய்தார் ரிஷப் பண்ட்!
Ind vs Ban: வங்கதேசத்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் தனது ஆறாவது சதத்தை பதிவு செய்தார்.

Ind vs Ban: இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 376 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அஸ்வின் அதிகபட்சமாக 113 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 86 ரன்கள் எடுத்தார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 149 ரன்னில் சுருண்டது. இதனைத் தொடர்ந்து 227 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை ஆடத் தொடங்கியது. ரோஹித் சர்மா 5, ஜெய்ஸ்வால் 10 மற்றும் விராட் கோலி 17 ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி 67 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இருந்தது. அப்போது சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்து ஆடினர். சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
சதம் விளாசிய ரிஷப் பண்ட் - சுப்மன் கில்
இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 124 பந்துகளில் சதம் அடித்து சாதனை செய்துள்ளார். ரிஷப் பண்ட்-ஐ தொடர்ந்து சுப்மன் கில் சதம் அடித்தார். சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 119 ரன்கள் எடுத்து இருந்தார். 632 நாட்களுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பிய ரிஷப் பண்ட், கம்பேக் போட்டியிலேயே சதமடித்து மாஸ் காட்டி இருக்கிறார். சிறப்பாக ஆடிய அவர் 88 பந்துகளில் அரைசதம் கடந்தார். மதிய உணவு இடைவேளையின் போது, இந்தியா 7 விக்கெட்டுகள் மீதமிருக்கையில் 432 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது, இது பார்வையாளர்களுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.