தமிழ் செய்திகள்  /  Cricket  /  Rcb Never Wins In Chepauk Since 2008 And Looking To End Losing Streak By Defeating Csk

CSK vs RCB Preview: சிஎஸ்கேவின் பலம், ஆர்சிபிக்கு பலவீனம்! 16 ஆண்டு கால தவத்துக்கு மோட்சம் கிடைக்குமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 22, 2024 07:00 AM IST

16 ஆண்டு காத்திருப்புக்கு பின்னர் சேப்பாக்கத்தில் தோல்வியை தழுவி வரும் ஆர்சிபி அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அந்த மோசமான பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். ஆனால் இன்று நடைபெற இருக்கும் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு பலமாக இருக்கும் விஷயம், ஆர்சிபிக்கு பலவீனமாக இருந்து வருகிறது.

ஐபிஎல் 2024 முதல் போட்டியில் களமறிங்க இருக்கும் ஆர்சிபி கேப்டன் டூ பிளெசிஸ், சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்
ஐபிஎல் 2024 முதல் போட்டியில் களமறிங்க இருக்கும் ஆர்சிபி கேப்டன் டூ பிளெசிஸ், சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

ட்ரெண்டிங் செய்திகள்

முதல் போட்டி என்பதால் வண்ணமயமான தொடக்க விழாவுக்கு பின்னர் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்வாட் தனது முதல் போட்டிகள் களமிறங்க இருக்கும் நிலையில், முன்னாள் சிஎஸ்கே வீரரும், தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டனுமான டூ பிளெசிஸ் முதல் முறையாக சேப்பாக்கத்தில் எதிரணி கேப்டனாக களமிறங்க இருக்கிறார்.

16 ஆண்டுகள் காத்திருப்பு

சென்னை சேப்பாக்கத்தில் வைத்து ஐபிஎல் தொடங்கிய முதல் சீசனில் சிஎஸ்கே அணியை ஆர்சிபி அணி வீழ்த்தியது. அதன் பிறகு சேப்பாக்கத்தில் விளையாடிய போட்டிகளில் தொடர்ச்சியாக 7 தோல்விகளை சந்தித்துள்ளது. இதையடுத்து அந்த தோல்வி பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு ஆர்சிபி அணி களம் இறங்க இருக்கிறது. அந்த அணி வெற்றி பெறும் பட்சத்தில் 16 ஆண்டு கால காத்திருப்புக்கு முடிவு கிடைக்கும்.

புதிய கேப்டன் ருதுராஜுக்கு சவால்

ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் போட்டோஷுட்டுக்கு முன்னர் தோனி கேப்டன்சியில் இருந்து விலகுவதாக அறிவத்த நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்ட்டார். இதையடுத்து அவருக்கு முதல் போட்டியே சவால் மிக்க போட்டியாக அமைந்துள்ளது.

ஏற்கனவே, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ருதுராஜ் கேப்டனாக செயல்பட்டிருக்கும் நிலையில், அந்த அனுபவம் அவருக்கு கைகொடுக்கும் என நம்பலாம்.

காயத்தில் இருந்து திரும்பிய வீரர்கள்

கடந்த சீசன் முழுவதுமே மூட்டு வலி பாதிப்புடன் விளையாடிய எம்எஸ் தோனி, சிஎஸ்கே அணிக்கு 5வது ஐபிஎல் கோப்பையும் பெற்று தந்தார். ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் தற்போது முழு உடற்தகுதியுடன் இருக்கிறார்.

அதேபோல் சிஎஸ்கே வீரரான ஷிவம் துபேவும் காயம் காரணமாக ரஞ்சி கோப்பை நாக்அவுட் போட்டிகளில் விளையாடவில்லை. தற்போது அவர் காயத்திலிருந்து குணமாகி திரும்பியுள்ளார்.

இதற்கிடையே இலங்கை இளம் வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பதீரனா காயம் காரணமாக ஆரம்ப கட்டத்தில் சில போட்டிகள் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்கதேசத்தை சேர்ந்து இடதுகை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறாராம்

ஆர்சிபி அணியை பொறுத்தவரை வீரர்கள் பிட்டாக இருப்பதுடன், காயம் தொடர்பான அச்சுறுத்தல் யாருக்கும் இல்லை. விராட் கோலி இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாட இருக்கிறார்.

சிஎஸ்கேவின் பலமும், ஆர்சிபி பலவீனமும்

முக்கிய பவுலர்கள் காயமடைந்தாலும் சிஎஸ்கேவின் ஸ்பின் பவுலிங், ஆர்சிபியை ஒப்பிடுகையில் பலமாகவே உள்ளது. ரவீந்திர ஜடேஜா, மகேஷ் தீக்‌ஷானா, மொயின் அலி ஆகியோர் முக்கிய ஸ்பின்னர்களாக இருக்கிறார்கள். ரச்சின் ரவீந்திரா சேர்க்கப்படும் பட்சத்தில் அவர் பகுதி நேர பந்து வீச்சாளராக இருப்பார்.

வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார், முகேஷ் செளத்ரி ஆகியோர் உள்ளார்கள். ஆனால் ஆர்சிபி அணியில் ஸ்பின்னர்களாக மயங்க் டாகர், ஹிமான்ஷு சர்மா, கரண் ஷர்மா, ஸ்வப்னில் சிங் ஆகியோர் உள்ளார்கள். இதில் கரண் ஷர்மா தவிர மற்றவர்கள் அனுபவம் இல்லாதவர்களாக இருப்பத பலவீனமாக அமைந்துள்ளது.

ஸ்பின்னுக்கு நன்கு ஒத்துழைக்கும் சேப்பாக்கம் போன்ற ஆடுகளத்தில் டாப் கிளாஸ் ஸ்பின்னர் இல்லாமல் ஆர்சிபி களமிறங்கவுள்ளது.

பேட்டிங்கை பொருத்தவரை இரு அணிகளும் சமபலம் பொருந்தியதாகவே உள்ளது. எனவே இரு அணிகளிலும் வானவேடிக்கைக்கு கியாரண்டி என்றே கூறலாம்

பிட்ச் நிலவரம்

சேப்பாக்கம் மைதானத்தில் மத்திய பகுதியில் இருக்கும் ஆடுகளத்தில் இன்றைய போட்டி நடைபெற இருக்கிறது. பாரம்பரியமாக இது ஸ்பின்னுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் பந்து மெதுவாக எழும்பும் விதமாக இருக்கும் என கூறப்படுவதால் பேட்ஸ்மேன்களுக்கு சவால் மிக்க தாகவே இருக்கும்.

வானிலையை பொறுத்தவை சென்னையில் வறண்டு காணப்படும் எனவும், வெப்பநிலை 31 டிகிரி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

சிஎஸ்கே vs ஆர்சிபி இதுவரை

இந்த இரு அணிகளும் இதுவரை 31 போட்டிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சிஎஸ்கே 20, ஆர்சிபி 10 போட்டிகளில் வென்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு கிடைக்கவில்லை.

போட்டியை எங்கு காணலாம்

சிஎஸ்கே - ஆர்சிபி இடையிலான ஐபிஎல் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஆகிய சேனல்களில் கண்களிக்கலாம். அதேபோல் ஜியோ சினிமா செயலியிலும் நேரடியாக ஸ்டீரிமிங் செய்யப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point