RR vs DC Result: கடைசி ஓவரில் திருப்புமுனை..! ராஜஸ்தான் துல்லிய பவுலிங், பீல்டிங்கில் சறுக்கிய டெல்லி கேபிடல்ஸ்
துல்லியமான பந்து வீச்சு, பீல்டிங்கில் மிரட்டிய ராயல்ஸ் வீரர்கள், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு தொடர்ச்சியாக நெருக்கடியை தந்தார்கள். ரன்குவிப்பில் தடுமாறிய டெல்லி பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தால் அந்த அணி இந்த சீசனின் இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் (ANI)
ஐபிஎல் 2024 தொடரின் 9வது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் இருக்கும் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாடும் 100வது போட்டியாக அமைந்திருந்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அதிரடி
டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் விக்கெட் 5 இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரியான் பராக் 84 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இவருக்கு அடுத்தபடியாக ரவிச்சந்திரன் அஸ்வின் 29, துருவ் ஜுரல் 20 ரன்கள் எடுத்தனர்.
