தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Rahul Dravid: “ரன்கள்,விக்கெட்டுகளை யாரும் நினைவில் வைக்காமாட்டார்கள்!” டிரெஸ்ஸிங் ரூமில் ராகுல் டிராவிட் கடைசி உரையாடல்

Rahul Dravid: “ரன்கள்,விக்கெட்டுகளை யாரும் நினைவில் வைக்காமாட்டார்கள்!” டிரெஸ்ஸிங் ரூமில் ராகுல் டிராவிட் கடைசி உரையாடல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 02, 2024 02:45 PM IST

நீங்கள் அடிக்கும் ரன்கள், விக்கெட்டுகளை யாரும் நினைவில் வைக்காமாட்டார்கள். ஆனால் கோப்பை வென்றது பற்றி அனைவரும் பேசுவார்கள். இதுபோன்ற தருணங்களை நினைவில் வைத்திருப்பார்கள், எனவே இதை ரசித்து அனுபவிப்போம் என்று ராகுல் டிராவிட் இந்திய அணியினரிடம் டிரெஸ்ஸிங் ரூமில் வைத்து கடைசியாக உரையாடியுள்ளார்.

India head coach Rahul Dravid gives farewell speech on last day in the dressing room
India head coach Rahul Dravid gives farewell speech on last day in the dressing room

17 ஆண்டுகளுக்கு பின்னர் டி20 உலகக் கோப்பை, 11 ஆண்டு ஐசிசி கோப்பை வறட்சிக்கு முற்றுப்புள்ளி, டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் வெற்றி டபுள் மகிழ்ச்சிய இந்திய அணியினருக்கும், ரசிகர்களுக்கும் அளித்துள்ளது.

இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னரே, இதுதான் தனது கடைசி தொடர் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து ராகுல் டிராவிட் தெரிவித்திருந்தார். அந்த வகையில் அவருக்கு சிறந்த பிரியவிடை பரிசாகவும் இந்தியா வென்றிருக்கும் டி20 உலகக் கோப்பை அமைந்துள்ளது.

பயிற்சியாளராக கோப்பை வென்ற டிராவிட்

குறிப்பாக 2007இல் இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பெற்ற அவமானகரமான தோல்விக்கு, இந்திய அணியின் பயிற்சியாளராக அதே இடத்தில் வைத்து தக்க பதிலடி கொடுத்து விடைபெற்றுள்ளார் டிராவிட்.

இதையடுத்து இந்திய டிரெஸ்ஸிங் ரூமில் ராகுல் டிராவிட் தனது பிரியாவிடை நிகழ்ச்சியின் போது பல்வேறு விஷயங்களை உணர்ச்சிகரமாக பேசியுள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

உலகக் கோப்பை தொடர்களில் ஒரு வீரராக மூன்று முறை, பயிற்சியாளராக மூன்று முறை என டிராவிட் தனது ஆறாவது மற்றும் இறுதி முயற்சி கோப்பையை வென்று சாதித்துள்ளார். களத்தில் அமைதியாகவும், ஆக்ரோஷமாக தனது உணர்ச்சிகளை வெளிக்காட்டதவராக இருந்து வரும் டிராவிட்டிடம், விராட் கோலி டி20 உலகக் கோப்பையை வழங்கியபோது அவர் அதை உயர்த்தி காட்டி கத்தியவாறு தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

டிராவிட் உணர்ச்சிகரமான பேச்சு

இந்தியாவின் வெற்றிக்குப் பின் சில மணி நேரங்களுக்கு பிறகு டிரெஸ்ஸிங் அறையில் வீரர்களிடையே உரையாற்றிய டிராவிட்,

"உண்மையில் சொல்வதென்றால் பேச எனக்கு வார்த்தைகள் இல்லை. ஆனால் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், நம்பமுடியாத நினைவகத்தின் ஒரு பகுதியாக என்னை மாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்த தருணங்களை நீங்கள் அனைவரும் நினைவில் வைத்திருப்பீர்கள்.

நீங்கள் அடிக்கும் ரன்கள் அல்லது விக்கெட்டுகளை யாரும் நினைவில் கொள்வதில்லை, ஆனால் கோப்பை வென்றது பற்றி அனைவரும் பேசுவார்கள். இதுபோன்ற தருணங்களை நினைவில் வைத்திருப்பார்கள், எனவே இதை ரசித்து அனுபவிப்போம்".

நீங்கள் விளையாடிய விதம், களத்தில் போராடிய விதம், குழுவாக பணியாற்றிய விதம் ஆகியவற்றை பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பல ஆண்டுகளாக நாம் கோப்பை அருகே நெருங்கி வந்து ஏமாற்றங்களை சந்தித்துள்ளோம்.

ஆனால் நீங்கள் அனைவரும் என்ன செய்தீர்கள், ஆதரவு ஊழியர்கள் அனைவரும் என்ன செய்தோம், கடின உழைப்பு, செய்த தியாகங்கள் உங்கள் ஒவ்வொருவரைப் பற்றியும், நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்பதைப் பற்றியும் முழு நாடும் பெருமை கொள்கிறது.

நெருக்கமானவர்களின் தியாகம்

உங்கள் பெற்றோர்கள், மனைவிகள், குழந்தைகள், சகோதரர், பயிற்சியாளர்கள், பலர் இந்த தருணத்தை அனுபவிக்க பல தியாகங்களைச் செய்துள்ளனர், உங்களுடன் மிகவும் கடினமாக உழைத்துள்ளனர். உண்மையில், உங்களுடன் இந்த நினைவகத்தின் ஒரு பகுதியாக அவர்களும் இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.

பிசிசிஐக்கு நன்றி

ஒரு சிறந்த அணிக்குப் பின்னால், ஒரு வெற்றிகரமான அமைப்பும் உள்ளது, பிசிசிஐ மற்றும் திரைக்குப் பின்னால் உள்ளவர்களின் பணிகளை அவர்கள் செய்த பணிகளுக்கு நாங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொருவரும் சென்று விளையாட வாய்ப்பளிக்கும் ஒரு அமைப்பின் மூலம் வருகிறோம். எனவே பிசிசிஐக்கு மிக்க நன்றி"

இவ்வாறு அவர் கூறினார்.

ராகுல் டிராவிட்டின் இந்த உரையாடலின்போது பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவும் உடன் இருந்தார். டிராவிட்டின் கடைசி உரையாடலை பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.