தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Pbks Vs Gt Preview: பழி தீர்க்க காத்திருக்கும் குஜராத்! ஹாட்ரிக் தோல்வியில் இருந்து மீள முயற்சிக்கும் பஞ்சாப்

PBKS vs GT Preview: பழி தீர்க்க காத்திருக்கும் குஜராத்! ஹாட்ரிக் தோல்வியில் இருந்து மீள முயற்சிக்கும் பஞ்சாப்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 21, 2024 07:15 AM IST

பஞ்சாப்புக்கு எதிராக சொந்த மண்ணில் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக குஜராத் டைட்டன்ஸ் இன்றைய போட்டியில் களமிறங்கும் என எதிர்பார்க்கலாம். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஜொலிக்கு பட்சத்தில் பஞ்சாப் கிங்ஸ் மூன்று தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்ன்ஸ் இன்று மோதல்
பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்ன்ஸ் இன்று மோதல்

ட்ரெண்டிங் செய்திகள்

இரு அணிகளுக்கு இடையிலான முதல் மோதல் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே குஜராத் டைட்டன்ஸ் பதிலடி கொடுக்க காத்திருக்கும் போட்டியாக இது அமைந்துள்ளது.

இந்த இரு அணிகளும் தங்களது கடைசி போட்டியில் தோல்வியை தழுவியுள்ளன. அதிலும் பஞ்சாப் கிங்ஸ் தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை தழுவியுள்ளது.

பஞ்சாப்பின் பலவீனமான டாப் ஆர்டர்

பஞ்சாப் அணியின் டாப் ஆர்டர் மிகவும் பலவீனமாக இருந்து வருகிறது. ஷிகர் தவான் காயத்தால் விளையாடமல் இருப்பது பின்னடைவாக உள்ளது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான பேர்ஸ்டோ பார்ம் இல்லாமல் தவிப்பது, லியாம் லிவிங்ஸ்டன், பிரப்சிம்ரான சிங் ஆகியோரும் பெரிய இன்னிங்ஸை வெளிப்படுத்தாமல் இருந்து வருகிறார்கள்.

மிடில் ஆர்டரில் இருக்கும் சஷாங் சிங், அசுடோஷ் ஷர்மா ஆகியோர் தான் பஞ்சாப் பேட்டிங்கின் நம்பிக்கை நட்சத்திரங்களாக ஜொலித்து வருவதுடன், அணியையும் கரை சேர்த்து வருகின்றனர்.

பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா, ஹர்ப்ரீத் ப்ரார், ஹர்ஷல் படேல் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

எனவே பஞ்சாப்பின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஜொலிக்கும்பட்சத்தில் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு சிறப்பாகவே உள்ளது.

குஜராத் பேட்டிங், பவுலிங்கில் முன்னேற்றம் தேவை

நல்ல அணியாக இருந்தபோதிலும் பேட்டிங் அல்லது பவுலிங்கில் ஏதாவது தவறு செய்து வெற்றியை கோட்டை விடும் அணியாக குஜராத் டைட்டன்ஸ் இருந்து வருகிறது. அணியின் கேப்டனும், முக்கிய பேட்ஸ்மேனுமான கில் இதுவரை ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். அதேபோல் முக்கிய பேட்ஸ்மேன்களான சாய் சுதர்சன், டேவிட் மில்லர் பெரிய இன்னிங்ஸை வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள்.

பவுலிங்கை பொறுத்தவரை பக்காவாக செயல்பட்டாலும் பவுலர்கள் விக்கெட் வீழ்த்த வேண்டிய நேரத்தில் விக்கெட்டுகளை எடுக்காமலும், ரன்களை வாரி வழங்கியும் வருகிறார்கள். எனவே சூழ்நிலைக்கு தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினால் எதிரணிக்கு நெருக்கடி தந்து வெற்றி பாதைக்கு திரும்பலாம்.

பிட்ச் நிலவரம்

இந்த ஐபிஎல் தொடரில் கொஞ்சம் பெரிய மைதானமாக இருந்து வரும் முல்லான்பூர் வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்ககபுரியாக இருந்து வருகிறது. அதேசமயம் பேட்ஸ்மேன்களும் தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். தொடக்கத்தில் பவுலர்களுக்கு உதவினாலும் பின்னர் பேட்ஸ்மேன்களா ஜொலிப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை 25 டிகிரி வரை இருக்கும் எனவும் மழைக்கான வாய்ப்பு இல்லை எனவும் பனிப்பொலிவு இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்ன்ஸ் இதுவரை

இந்த இரு அணிகளும் 4 போட்டிகளில் இதுவரை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ளன. கடந்த போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக குஜராத் டைட்டன்ஸ் களமிறங்கும் என எதிர்பார்க்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point