PAK vs AUS Test Day 1: கருப்பு பேண்ட் அணிந்து கவாஜா விளையாடியது ஏன்?-முதல் நாளில் ஆஸி., 346/5
Usman Khawaja: அனைத்து உயிர்களும் சமம் என ஷூவில் எழுதியிருந்ததற்கு நான் ஆதரவு அளிக்கிறேன் என்று ஆஸி., கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 84 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 346 ரன்கள் எடுத்தது.
இன்றைய ஆட்டத்தில் உஸ்மான் கவாஜா கருப்பு பேண்ட்டை இடது கையில் கட்டி வந்தது ஏன் என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதமும் நடந்தது. அவர் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் காஸாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இதை செய்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக, ‘அனைவரின் வாழ்க்கையும் முக்கியம்’, ‘சுதந்திரம் ஒரு மனித உரிமை’ என்ற இந்த இரண்டு வாக்கியங்களை ஆங்கிலத்தில் எழுதிய ஷூவை அணிந்து விளையாட முடிவு செய்திருந்தார். எனினும், ஐசிசியின் விதிமுறைகள் இதை அனுமதிக்கவில்லை.
ஐசிசி அனுமதி அளிக்காததற்கு உஸ்மான் கவாஜா கண்டனம் தெரிவித்தார். ஐசிசி விதிமுறையானது, அரசியல், மதம் சார்ந்த செய்தி வீரர்கள் அணிந்திருக்கும் உடை, ஷூ, கேப் போன்றவற்றில் இருக்க தடை விதிக்கிறது.
உஸ்மான் கவாஜா ஆஸ்திரேலியாவின் முதல் இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அனைத்து உயிர்கும் சமம் என ஷூவில் எழுதியிருந்ததற்கு நான் ஆதரவு அளிக்கிறேன் என்று ஆஸி., கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் டிராவிஸ் ஹெட்டும், உஸ்மான் கவாஜாவுக்கு ஆதரவாக எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.
ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களம் புகுந்த வார்னர் ஆக்ரோஷமான ஆட்டத்தை தொடக்கம் முதலே வெளிப்படுத்தினார், 211 பந்துகளில் 164 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் ஆட்டமிழந்தார். இந்த சதம் அவரது 26வது டெஸ்ட் சதம் ஆகும்.
ஒரு பிட்ச் பவுன்ஸ் வழங்கும் சவால்களை எதிர்கொண்ட போதிலும், வார்னர் தனது அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பாக விளையாடினார். வெறும் 41 பந்துகளில் தனது அரை சதத்தை எட்டினார். மதிய உணவுக்குப் பிறகு அவரது ஸ்டிரைக் ரேட் குறைந்தபோது, அவர் 26வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.
வார்னர் சதம் விளாசியபோது ரசிகர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். பாகிஸ்தான் தொடர்தான் வார்னரின் கடைசி டெஸ்ட் தொடர் என கருதப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை பெர்த் நகரில் திட்டமிட்டப்படி போட்டி தொடங்கியது.
ஒட்டுமொத்தமாக இது வார்னரின் 48வது சர்வதேச சதமாகும், இது ரிக்கி பாண்டிங்கிற்கு (71) பிறகு அனைத்து வடிவங்களிலும் ஆஸ்திரேலியாவுக்காக இரண்டாவது அதிக சதம் அடித்தவர் ஆனார் வார்னர். விமர்சனங்கள் இருந்தபோதிலும், ஆஸி. தொடக்க ஆட்டக்காரர் வார்னர் கடந்த சில மாதங்களுக்குப் பிறகு அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார் என்பது இன்றைய ஆட்டத்தில் வெளிப்பட்டது எனலாம்.
உஸ்மான் கவாஜா 41 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மார்னஸ் லபுஸ்சேன் 16 ரன்களிலும், ஸ்டீவன் ஸ்மித் 31 ரன்களிலும் நடையைக் கட்டினர். துணை கேப்டன் டிராவிஸ் ஹெட் நிதானமாக விளையாடி 53 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.
மிட்செல் மார்ஷ் 15 ரன்களிலும், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 14 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.
பாகிஸ்தான் தரப்பில் அமர் ஜமால் 2 விக்கெட்டுகளையும், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அஃப்ரிடி, குர்ரம் ஷாஜத் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். நாளை இரண்டாவது நாள் ஆட்டம் தொடரும். பாகிஸ்தான் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்