தமிழ் செய்திகள்  /  Cricket  /  On This Day Test Match Between West Indies And England Completed In 62 Balls On Sabina Park

HT Cricket Special: 62 பந்துகளில் முடிந்த போட்டி! வரலாற்றில் குறுகிய டெஸ்ட் - காரணமாக இருந்த விஷயம் என்ன தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 29, 2024 07:30 AM IST

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறுகிய போட்டி இதே நாளில் வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையே நடைபெற்றது. வெறும் 62 பந்துகளுடன் போட்டி முடிக்கப்பட்டது.

62 பந்துகளில் முடிந்த வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட்  போட்டி
62 பந்துகளில் முடிந்த வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் அப்படியொரு எதிர்பார்த்திராத நிகழ்வு 26 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிகழ்ந்தது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து 6 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள சபினா பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. அப்போது தான் அணியினருக்கு காத்திருந்தது அதிர்ச்சி. ஆனால் இந்த அதிர்ச்சி வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களால் இல்லாமல் ஆடுகளத்தால் நிகழ்ந்தது யாருமே எதிர்பார்த்திராத திருப்புமுனையாக இருந்தது.

பவுலிங் செய்வதற்கு சுத்தமாக தகுதியில்லாத பிட்சில், அந்த காலகட்டத்தில் உலகை தங்களது வேகப்பந்து வீச்சால் மிரட்டி வந்த வால்ஷ் - ஆம்ரோஸ் கூட்டணி பந்து வீசியது. விளைவு எதிர்பாராத பவுன்சர், சீரற்ற பவுன்சர், பந்தின் வேகம் மாற்றமடைந்து உடலில் தாக்குதல் என இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கடும் அவஸ்தை அடைந்தார்கள்.

இந்த களோபரத்தில் இங்கிலாந்து அணி மூன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளையும் இழந்தது.

இதில் வசமாக சிக்கியது இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அப்போது இருந்த அலெக்ஸ் ஸ்டீவார்ட். வால்ஷ், ஆம்ரோஸ் வீசிய பந்துகள் மாறி மாறி அவரது கை விரல்களை பதம் பார்க்க, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவர் இதற்கு மேல் தாங்க முடியாது குருநாதா என பேட்டிங் செய்யாமல் இருந்தார்.

ஸ்டீவார்ட் களத்தில் இருந்த 66 நிமிடங்களில் பலமுறை அவருக்கு காயமடைந்த நிலையில், பிசியோதெரபிஸ்ட் 6 முறை களத்தினுள் புகுந்து அவசர சிகிச்சை அளித்தார்.

பிட்ச் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது என்பதை உணர்ந்த அம்பயர்கள், ரெப்ரி ஆகியோர் கூடி பேசி பிட்சை ஆய்வு செய்தனர். பின்னர் இரு அணி கேப்டன்களையும் அழைத்து ஒப்புதலுடன் டிரா என போட்டியை முடிப்பதாக அறிவித்தனர்.

வெறும் 62 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட இந்த போட்டி நிறுத்தபட்ட சம்பவம் இரு அணியினரையும் ஏமாற்றம் அடைய செய்தது. இருந்தாலும் வீரர்களின் பாதுகாப்பு கருதி, விளையாட தகுதியில்லாத பிட்சில் விளையாட்டை தொடர்வதை தவிர்க்கும் விதமாக எடுக்கப்பட்ட இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கு, “பாதுகாப்பு இல்லாத இந்த பிட்சில் விளையாட வேண்டாம் என்கிற அம்பயர்களின் இந்த துணிச்சலான முடிவுக்கு நன்றி” என சொல்லிய ஸ்டீவார்ட் நிம்மதி பெருமூச்சும் விட்டார்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் போட்டி தொடங்கி ஒரு செஷன் கூடி முடியாமல், மோசமான பிட்ச் காரணமாக இவ்வாறு நிறுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் குறுகிய காலத்தில் முடிந்த போட்டியாக இது வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

இந்த  போட்டியில் இங்கிலாந்து 10.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து கேப்டன் மைக் ஆர்தடன், மார்க் புட்சர், நாசர் ஹூசைன் ஆகியோர் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.  வால்ஷ் 2, ஆம்ரோஸ் ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

மொத்தம் 6 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

WhatsApp channel

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score stay connected with HT Tamil