HT Cricket Special: உதவி இருந்தும் அதிர்ஷ்டம் இல்லை! கும்ப்ளேவுக்கு கிடைத்த பாக்கியம் கிடைக்காமல் போன முரளிதரன்
கும்ப்ளே ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியபோது சக வீரர்கள் உதவியது போல், இலங்கை ஸ்பின் ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கும் அப்படியொரு வாய்ப்பு கிடைக்கையில் மற்ற வீரர்கள் நன்கு உதவியபோதிலும் அவரால் சாதனை நிகழ்த்த முடியாமல் போனது துர்தஷ்டமாகவே உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி யாரும் அவ்வளவு எளிதில் எட்ட முடியாத அளவில் இமாலய சாதனையை நிகழ்த்திவிட்டு சென்றவர் இலங்கையின் ஸ்பின் ஜாம்பவானான முத்தையா முரளிதரன். அதே போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் ஸ்பின்னர் என்ற சாதனை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஸ்பின்னர் அனில் கும்ப்ளே வசம் உள்ளது.
இவரை போல் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தும் வாய்ப்பு முரளிதரனுக்கு, அதுவும் தனது உள்ளூர் மைதானத்தில் கிடைத்தபோதிலும் அது நிறைவேறாமல் போயுள்ளது. இத்தனைக்கும் கும்ப்ளே 10 விக்கெட்டுகளை எடுத்த இன்னிங்ஸில் சக வீரர்கள் கேட்ச்கள் பிடிக்காமலும், எல்பிடபிள்யூ அப்பீல் செய்யாமலும், பவுலர்கள் விக்கெட் வீழ்த்தும் பந்தை வீசாமலும் என பல வகைகளில் உதவி புரிந்தனர்.
இதேபோன்ற உதவியை இலங்கை வீரர்கள் ,முத்தையா முரளிதரனுக்கு செய்த போதிலும், விதியின் விளையாட்டால் அவரால் 10 விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் போனது. முரளிதரன் டெஸ்ட் கேரியரில் சிறந்த பவுலிங்காக இருந்து வரும் 51 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் எடுத்த போட்டி சரியாக 22 ஆண்டுகளுக்கு முன் ஜனவரி 4ஆம் தேதியான இதே நாளில் தான் நடைபெற்றது.