HT Cricket Special: பொங்கல் டெஸ்ட்! சென்னை குளிரில் 10 மணி நேரம் பேட் செய்த கவாஸ்கர் - பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
சென்னை குளிரில் கவஸ்கரின் நீண்ட நெடிய இன்னிங்ஸ், கபில் தேவ் அரைசதம் மற்றும் பவுலிங்கில் எடுத்த 11 விக்கெட்டுகள் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாதனை வெற்றி பெற வைக்கு உதவிகரமாக இருந்தது. பொங்கலுக்கு பின் கிடைத்த இந்த வெற்றி ரசிகர்களுக்கும் சிறந்த விருந்தாக மாறியது.
கிறிஸ்துமஸுக்கு மறுநாள் தொடங்கி நடைபெறும் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. 1970களில் மத்தியில் இருந்து பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகள் விளையாடப்பட்டு வருகிறது.
ஆனால் அதற்கு முன்பே 1960களில் இருந்தே பொங்கல் விடுமுறையை கருத்தில் கணக்கில் கொண்டு பொங்கல் டே டெஸ்ட் போட்டி இந்தியாவில், அதிலும் சென்னை சேப்பாக்கத்தில் நடத்தப்பட்டு வந்தது.
அப்படியொரு பொங்கல் டே டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது பரம எதிரி அணியாக இருந்து வரும் பாகிஸ்தானை வீழ்த்தி அந்த அணிக்கு எதிராக 27 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
1979-80ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த பாகிஸ்தான் 6 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. நவம்பரில் தொடங்கிய இந்த டெஸ்ட் தொடர் ஜனவரி வரை நடைபெற்றது.
பெங்களுரு, டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிவடைந்தன. இதைத்தொடர்ந்து மும்பையில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 131 ரன்கள் வித்தயாசத்தில் வென்று 1-0 என முன்னிலை பெற்றது.
பின்னர் கான்பூரில் நடந்த 4வது டெஸ்ட் டிராவில் முடிவுற, 5வது டெஸ்ட் போட்டி பொங்கலுக்கு மறுநாள் ஜனவரி 15ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது. வழக்கமாக சென்னை என்றாலே வாட்டி வதைக்கும் வெயிலில் வீரரர்கள் அல்லல்படுவதை பார்த்திருக்கிறோம்.
ஆனால் ஜனவரி மாதத்தில் இந்த போட்டி நடைபெற்றதால் சென்னையில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மாறாக காலை, மாலை வேலைகளில் குளிர் நிலவியது.
சென்னை வானிலையில் எப்போதுமே காற்றில் ஈரப்பதம் சற்று அதிகமாகவே காணப்படும். இதனால் வீரர்கள் உடலில் நீரேற்றமானது குறைந்து நீரழப்பு ஏற்படுவதை காண முடியும். வெயில், பனி என எந்த காலமாக இருந்தாலும் வீரர்களுக்கு இது சவால் தரும் சூழ்நிலையாகவே இருக்கும்.
இப்படியொரு கடினமான சூழலில் இந்திய அணி கேப்டனும், ஓபனிங் பேட்ஸ்மேனுமான சுனில் கவாஸ்கர் பொறுப்புடன் பேட் செய்து சதமடித்திருப்பார். அணியின் டாப் ஸ்கோரராக 373 பந்துகளை எதிர்கொண்டு 166 ரன்கள் அடித்திருக்கும் கவாஸ்கர், 593 நிமிடங்கள் என நீண்ட நேரம் களத்தில் பேட் செய்தார். 9 மணி நேரம் 53 நிமிடங்கள் கிரீஸில் இருந்த அவர், இந்தியாவுக்கு முதல் இன்னிங்ஸில் மிக பெரிய முன்னிலை பெற்று தந்தார்.
கவாஸ்கருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் குவிப்பில் ஈடுபட்ட கபில்தேவ், அவர் அவுட்டான பின்னரும் தன் பங்குக்கு ரன் வேட்டை நிகழ்த்தி 84 ரன்கள் அடித்தார். பேட்டிங்குடன் நிறுத்தாமல் பவுலிங்கிலும் ஜொலித்த கபில், இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பாகிஸ்தானுக்கு எதிராக பேட்டிங், பவுலிங் என முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 6 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது எஞ்சியிருக்கும் ஒரு போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும், 2-1 என இந்தியா முன்னிலை பெறும் என்ற நிலை இருந்தது.
இதன் மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது. இந்த போட்டியில் கவாஸ்கரின் நீண்ட நெடிய இன்னிங்ஸில் எடுக்கப்பட்ட 166 ரன்கள், கபில் தேவ் 84 ரன்கள் மற்றும் 11 விக்கெட்டுகள் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பாக அமைந்தன.
இந்த போட்டிக்கு அடுத்தபடியாக ஈடன் கார்டனில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிய, இந்தியா 2-0 என தொடரை கைப்பற்றியது.
1952 முதல் இந்தியா - பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடந்த 16 டெஸ்ட் தொடரில் இந்தியா 4 முறையும், பாகிஸ்தான் 5 முறையும் வென்றுள்ளன.
சென்னை சேப்பாக்கத்தில் வைத்து பாகிஸ்தான் வீழ்த்தி டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியது கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறந்த பொங்கல் பரிசாகவே அமைந்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்