HT Cricket Special: பாகிஸ்தான் கேப்டன் ஆணவத்துக்கு பாடம்! இந்திய கிரிக்கெட்டில் மறக்க முடியாத Thug Life சம்பவம்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ht Cricket Special: பாகிஸ்தான் கேப்டன் ஆணவத்துக்கு பாடம்! இந்திய கிரிக்கெட்டில் மறக்க முடியாத Thug Life சம்பவம்

HT Cricket Special: பாகிஸ்தான் கேப்டன் ஆணவத்துக்கு பாடம்! இந்திய கிரிக்கெட்டில் மறக்க முடியாத Thug Life சம்பவம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 09, 2024 06:00 AM IST

ஆணவத்தை வெளிப்படுத்தினால் தக்க பதிலடியை சந்திக்க நேரிடும் என்பதை உணர்த்தும் விதமாக உலகக் கோப்பை போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், பாகிஸ்தான் கேப்டன் அமீர் சோஹலை போல்டாக்கிய சம்பவம் அமைந்தது. கிரிக்கெட் விளையாட்டில் சிறந்த Thug Life சம்பவமாகவே இது பார்க்கப்படுகிறது.

1996 உலகக் கோப்பை தொடரின் இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டியில் அமீர் சோஹைல் மற்றும் வெங்கடேஷ் பிரசாத் இடையிலான மோதல்
1996 உலகக் கோப்பை தொடரின் இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டியில் அமீர் சோஹைல் மற்றும் வெங்கடேஷ் பிரசாத் இடையிலான மோதல்

இதுவரை உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவை ஒரு முறை கூட வெல்ல முடியாத அணியாகவே பாகிஸ்தான் இருந்து வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டிகளுமே வரலாற்று சிறப்பு வாய்ந்தவையாக இருந்து வருகிறது.

அந்த வகையில் உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இரண்டாவது முறையாக நாக் அவுட் சுற்று போட்டியில் 28 ஆண்டுகளுக்க முன் இதே நாளான மார்ச் 9ஆம் தேதி தான் மோதிக்கொண்டது. 1996 உலகக் கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டத்தில் பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் பலப்பரிட்சை நடத்தின.

இந்த போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்கிற நெருக்கடியோடு, எதிரி அணியான பாகிஸ்தானை கட்டாயமாக வீழ்த்த வேண்டும் என அழுத்தமும் இருந்தது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியினர் சூப்பரான வெற்றியை பெற்றனர்.

ஆல்ரவுண்ட் ஆட்டத்தில் கலக்கிய இந்தியா

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது. ஓபனிங் பேட்ஸ்மேன் சித்து 93 ரன்கள் அடிக்க, கடைசியாக பேட் செய்ய வந்து அதிரடியான பினிஷிங் கொடுத்த ஜடேஜா 45 ரன்கள் அடித்தார்.

பின்னர் சேஸிங்கில் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சிறப்பான அடித்தளத்தை ஓபனர்கள் அமீர் சோஹைல், சயித் அன்வர் அமைத்து கொடுத்தபோதிலும் மற்றவர்கள் சொதப்ப 9 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் மட்டுமே எடுத்த பாகில்தான் 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஆணவத்துக்கு கிடைத்த பாடம்

இந்த போட்டியில் சித்துவின் அரைசதம், ஜடேஜாவின் அதிரடி பினிஷ், இந்தியா பேட்டிங் வரிசையின் சிறப்பான ஆட்டம் என பல்வேறு மறக்க முடியாத விஷயங்கள் இருந்தாலும், பாகிஸ்தான் கேப்டன் அமீர் சோஹைல் ஆணவத்துக்கு இந்திய பவுலர் வெங்கடேஷ் பிரசாத் கற்பித்த பாடம் கிரிக்கெட் விளையாட்டில் சிறந்த தக் லைஃப் சம்பவமாகவே உள்ளது.

வெங்கடேஷ் பிரசாத் வீசிய ஆட்டத்தின் 14வது ஐந்தாவது பந்தில் கவர்ஸ் திசையில் பவுண்டரி அடிக்கும் சோஹைல், அதன் பின்னர் அடுத்து அங்குதான் அடிக்கபோகிறேன் என பிராசாத்திடம் அந்த இடத்தை நோக்கி ஆணவத்துடன் கை காட்டுவார். ஆனால் அடுத்த பந்தில் நடந்ததோ கிரிகெட் விளையாட்டில் தரமான பதிலடியாகவும் பெஸ்ட் தக் லைஃப் சம்பவமாகவும் அமைந்தது.

பிரசாத் வீசிய பந்தை மீண்டும் அதேபோல் அடிக்க முயற்சித்து ஆஃப் ஸ்டம்ப் தெறிக்க போல்டாகி வெளியே செல்வார். இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த கிரிக்கெட் விளையாட்டில் தரமான சம்பவமாக இந்த நிகழ்வு அமைந்தது. ஆணவத்தை வெளிப்படுத்திய சோஹைலுக்கு மட்டுமல்ல, Over Confidence உடம்புக்கு ஆகாது என உணர்த்தும் விதமாக இருந்தது.

இந்த நிகழ்வு குறித்து வெங்கடேஷ் பிரசாத் இந்துஸ்தான் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

"அந்த சம்பவத்தை நினைத்து பார்க்கையில் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. நான் எந்தவொரு மேஜிக்கும் செய்யவில்லை. அப்படி கூறவும் மாட்டேன்.

ஆனால் இதுபோல் தான் பந்து வீச வேண்டும் என ஒவ்வொரு பவுலர்களும் நினைப்பார்கள். சரியான லென்த், லைனில் பந்து வீசியதால் தான் ஆஃப் ஸ்டம்ப் மேல்பகுதியை பதம் பார்த்தது.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அழுத்தம், எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். செய்தித்தாள் படிக்காவிட்டாலும் ஏதாவதொரு வகையில் எதிர்பார்ப்பு பற்றி தெரியவரும். நானும் அதை அப்போது உணர்ந்தேன்.

எனது பந்துவீச்சில் பவுண்டரிகளை அடித்தபோதிலும் நம்பிக்கை இழக்காமல் நேர்மறை எண்ணத்துடன் இருந்தேன்.

பேட்டிங் செய்துவந்த அமீர் சோஹைல் உச்சகட்ட நம்பிக்கையில் இருந்தார். போல்டாகி வெளியேறும் வரை அதீத நம்பிக்கையுடன் இருந்ததோடு, ஆணவத்தையும் வெளிப்படுத்தினார். ஆணவத்தை வெளிப்படுத்தினால் இதுதான் நடக்கும்.

கிரிக்கெட் போட்டியில் எதுவும் திட்டமிட்டு நடைபெறாது. விளையாட்டின் போக்கில் வார்த்தை பரிமாற்றங்கள் நடக்கும். ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவது முக்கியம் என்றாலும், அமைதி மற்றும் இணைக்கத்தை விட்டு விடக்கூடாது.

மொத்தத்தில் அமீர் சோஹைல் அவுட்டான தருணம் ஒவ்வொரு இந்தியர்கள் எதிர்பார்த்த ஸ்பார்க் தருணமாக நினைக்கிறேன்" என்றார்.

இந்தியா - பாகிஸ்தான் 1996 உலகக் கோப்பை போட்டியின் சிறப்புகள்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இந்த போட்டிதான் சின்னசாமி மைதானத்தில் நடந்த முதல் பகலிரவு ஆட்டமாக அமைந்தது. 1989ஆம் ஆண்டு நேரு கோப்பை தொடருக்கு பின் பாகிஸ்தான் இந்திய மண்ணில் விளையாடிய முதல் போட்டியும் இதுதான்

இந்தியா கடைசி 4 ஓவரில் 57 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யுனிஸ் 200வது விக்கெட்டை இந்த போட்டியில் தான் எடுத்தார். அத்துடன் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன், அதிரடி பேட்ஸ்மேன் ஜாவித் மியான்டட் கடைசி போட்டியாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.