MS Dhoni: கிரிக்கெட் அகாடமி ஒப்பந்தத்தில் ரூ. 15 கோடி இழந்த தோனி! பிரபல நிறுவனம் மீது வழக்குப்பதிவு
கிரிக்கெட் அகாடமியை நடத்துவதற்காக ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடிக்காத காரணத்தால் தோனி தரப்புக்கு ரூ. 15 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவான் வீரருமான மகேந்திர சிங் தோனி, 2017ஆம் ஆண்டில் கிரிக்கெட் அகாடமி ஒப்பந்தம் தொடர்பாக ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிர்வாகத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் மீது கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ராஞ்சி நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகளான மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா விஸ்வாஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கிரிக்கெட் அகாடமியை நடத்துவதற்காக 2017ஆம் ஆண்டு தோனியுடன், திவாகர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனால் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.
ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உரிமை கட்டணத்தை செலுத்தவும், ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி லாபத்தை பகிர்ந்து கொள்ளவும் வேண்டும். ஆனால் இதை செய்யவில்லை என்று தோனி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
