Mohammed Shami: தற்கொலை எண்ணத்துடன் 19வது மாடி பால்கனியில் நின்ற ஷமி..! ஒரு நாள் இரவில் நடந்த அந்த சம்பவம்
தற்கொலை எண்ணத்துடன் 19வது மாடி பால்கனியில் நின்ற ஷமி, பின்னடைவுகளை சமாளிப்பதில் வல்லவர் என அவரது நண்பர் உமேஷ் குமார் கூறியுள்ளார். காயத்தில் இருந்து குணமாகி இருக்கும் ஷமி வங்கதேசம், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்து வரும் முகமது ஷமி, தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு உயரங்களை எட்டியுள்ளார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வென்ற டெஸ்ட் தொடரில் முக்கிய பங்களிப்பை வெளிப்படுத்தினார்.
கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலராக திகழ்ந்து வரும் ஷமி, அதிகவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற பெருமையும் பெற்றார். அதேபோல் தொடர்ச்சியாக 4 விக்கெட்டுகளை மூன்று முறை வீழ்த்திய பவுலராகவும் இருந்துள்ளார். இதேபோல் பல்வேறு சாதனைகளையும், ஆதிக்கத்தையும் செலுத்தி வந்த ஷமி, கிரிக்கெட் களத்தின் உள்ளே மற்றும் வெளியே தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளையும், துயரங்களையும் சந்தித்துள்ளார்.
ஷிமி மீதான சர்ச்சை, குற்றச்சாட்டுகள்
தனது முன்னாள் மனைவி ஹசின் ஜாகனுடன் இருந்த கொந்தளிப்பு, மகளுடனான பிரிவு, மேட்ச் பிக்ஸிங் குற்றாச்சாட்டு போன்ற பல்வேறு சர்ச்சைகள், சிக்கல்களிலும் சிக்கி இன்னலுக்கு ஆளானார்.
இதுபோதாதென்று அவரது முன்னாள் மனைவியான ஹசின் ஜகான், ஷிமி தன்னை துன்புறுத்தியதாக போலீஸில் புகார் அளித்தார். இதன் விளைவாக பிசிசிஐ அவரது மத்திய ஒப்பந்தத்தை சில காலம் நிறுத்தியது. இந்த குற்றச்சாட்டுகளும், சர்ச்சைகளும் ஷமிக்கு கடினமான நேரமாக அமைந்தது.
தற்கொலை எண்ணத்தில் பால்கனியில் நின்ற ஷமி
தனக்கு ஏற்பட்ட துயரங்களில் இருந்த விடுபட தற்கொலை தான் தீர்வு என ஷமி எண்ணிய காலகட்டம் குறித்து அவரது நண்பரான உமேஷ் குமார், ஷிமி அண்பிளக்ட் என்ற ஷோவில் விவரித்துள்ளார்.
இதுதொடர்பாக உமேஷ் குமார் கூறியதாவது, " அந்த கடினமான காலகட்டத்தில் ஷமி எல்லாவற்றையும் எதிர்கொண்டார். அப்போது என்னுடன் தான் வசித்து வந்தார்.
பாகிஸ்தானுடனான பிக்சிங் குற்றச்சாட்டுகள், அவரை உடைந்து போக வைத்தது. அன்று இரவில் பிரச்னை உருவானது. என்னால் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள முடியும் ஆனால் எனது நாட்டுக்கு துரோகம் இழைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்றார்.
அன்று இரவு (அவரது வாழ்வை முடித்துக்கொள்ள) அவர் கடுமையாக ஏதாவது செய்ய விரும்புவதாகவும் செய்தி வந்தது. நான் அதிகாலை 4 மணியளவில் தண்ணீர் குடிக்க எழுந்தேன். நான் சமையலறைக்குச் சென்று கொண்டிருந்தபோது பால்கனியில் அவர் நிற்பதைப் பார்த்தேன்.
நாங்கள் குடியிருந்ததது 19வது மாடி. என்ன நடந்தது என்று புரிந்தது. ஷமியின் கேரியரில் அந்த இரவு மிக நீண்டதாக நான் உணர்கிறேன். பின்னர், ஒரு நாள், நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, இந்த விஷயத்தை விசாரித்த கமிட்டியிடம் நான் குற்றமற்றவன் என கூறி தனது போனுக்கு மெசேஜ் வந்தது என்று தெரிவித்தார். அப்போது, உலகக் கோப்பையை வென்றதை விட மகிழ்ச்சியாக இருந்தார்" என்று கூறினார்.
பின்னடைவுகளை சமாளிப்பதில் வல்லவர்
"நீங்கள் எதற்கு அதிக முன்னுரிமை கொடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும், மற்ற நபரின் கூற்றுகள் எவ்வளவு உண்மை என்பதைப் பொறுத்தும் பின்னடைவுகள் சமாளிக்க முடியும். மற்றவரின் செயல்கள் தவறானவை மற்றும் உங்களுக்கு முக்கியமானவை அல்ல என்பதை நீங்கள் அறிந்தால், உங்கள் முன்னுரிமைகளை விட்டுவிடாதீர்கள். எனவே தொடர்ந்து போராட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக திகழ்கிறார் ஷமி" என்று உமேஷ் கூறினார்
ஷிமி கம்பேக்
கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் கணுக்கால் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடவில்லை. அதேபோல் ஐபிஎல் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை.
தற்போது காயம் குணமடைந்த நிலையில், பிட்னஸை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற இருக்கும் நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளுக்கு எதிரான தொடரில் அவர் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்