தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Ind Vs Can Abandoned: தொடர் மழை, ஈரப்பதம் மிக்க மைதானம்! ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்ட இரண்டாவது போட்டி

Ind vs Can Abandoned: தொடர் மழை, ஈரப்பதம் மிக்க மைதானம்! ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்ட இரண்டாவது போட்டி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 15, 2024 09:25 PM IST

தொடர் மழை மற்றும் ஈரப்பதம் மிக்க மைதானம் காரணமாக இந்தியா - கனடா இடையிலான போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. லாண்டர்ஹில் மைதானத்தில் தொடர்ந்து இரண்டாவது போட்டி கைவிடப்பட்டுள்ளது.

தொடர் மழை, ஈரப்பதம் மிக்க மைதானம், லாண்டர்ஹில்லில் ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்ட இரண்டாவது போட்டி
தொடர் மழை, ஈரப்பதம் மிக்க மைதானம், லாண்டர்ஹில்லில் ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்ட இரண்டாவது போட்டி (AP)

டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் 33வது போட்டி குரூப் ஏ பிரிவில் இந்தியா - கனடா அணிகளுக்கு இடையே புளோரிடாவில் நடைபெற இருந்தது.  டி20 போட்டியில் இந்த இரு அணிகளும் முதல் முறையாக நேருக்கு நேர் மோதும் போட்டியாக அமைந்திருந்தது. 

இதையடுத்து போட்டி நடைபெறும் லாண்டர்கில் மைதானத்தில் தொடர் மழை காரணமாக அவுட்பீல்டிங் ஈரப்பதமுடன் காணப்பட்ட நிலையில், போட்டியானது ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

இந்த மைதானத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்த யுஎஸ்ஏ - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதையடுத்து இன்று இந்தியா - கனடா அணிகளுக்கு இடையிலான போட்டியும் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டுள்ள நிலையில், தொடர்ச்சியாக இரண்டு போட்டிகள் இங்கு நடைபெறாமல் போயுள்ளது.

புள்ளிப்பட்டியல் நிலவரம்

இந்த போட்டி தொடங்கும் முன் இந்தியா 3 போட்டிகள் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளது. கனடா அணியை பொறுத்தவரை 3 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டும் பெற்றிருந்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

குரூப் ஏ பிரிவில் இந்தியா, யுஎஸ்ஏ அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும் நிலையில், இந்த போட்டி சம்பிரதாய ஆட்டமாகவே பார்க்கப்பட்டது. அத்துடன் இந்திய அணியில் சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ் ஆகியோரில் ஒருவர் வாய்ப்பை பெறுவார்கள் எனவும், பார்மல் இல்லாமல் தவித்து வரும் விராட் கோலி தனது பார்மை மீட்டெடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அது நடக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் இரு அணிகளும் தற்போது தலா ஒரு புள்ளிகள் பெற்றிருக்கும் நிலையில், இந்தியா தனது லீக் சுற்றில் 4 போட்டிகளில் 3 வெற்றி, ஒரு முடிவு இல்லை என 7 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.

கனடா அணியை பொறுத்தவரை 4 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவு இல்லை என 3 புள்ளிகள் பெற்று தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. 

நாளை பாகிஸ்தான் - அயர்லாந்து போட்டி

குரூப் ஏ பிரிவில் கடைசி லீக் ஆட்டமாக பாகிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இதே மைதானத்தில் தான் நாளை நடைபெற இருக்கிறது. இந்த போட்டி இதுவரை ஒரு வெற்றி கூட பெறாத அயர்லாந்துக்கு ஆறுதல் வெற்றியை பெற வாய்ப்பாக இருக்கும் போட்டியாக உள்ளது.

அதேசமயம் முன்னாள் டி20 உலக சாம்பியனான பாகிஸ்தான் இந்த தொடரை விட்டு வெளியேறியிருக்கும் நிலையில், வெற்றியுடன் விடைபெறுவதற்கான வாய்ப்பாகவும் உள்ளது. 

இதைத்தொடர்ந்து இந்தியா, கனடா ஆகிய அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியா சூப்பர் 8 போட்டிகள்

இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஜூன் 20ஆம் தேதி பிரட்டவுனில் நடைபெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து இரண்டாவது போட்டியில் தகுதி பெறும் அணிக்கு எதிராக ஜூன் 22ஆம் தேதி நார்த் சவுண்டிலும், மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜூன் 24ஆம் தேதி கிராஸ் ஐஸ்லெட் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்தியாவின் சூப்பர் 8 போட்டிகள் அனைத்தும் இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெற இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.