IND vs SA Final: தரமான இன்னிங்ஸ்! கோலி நிகழ்த்திய சாதனை, அக்சர் படேல் அதிரடி - இந்தியா சவாலான இலக்கு
டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் பெரிதாக ஜொலிக்காத கோலி முக்கியத்துவம் மிக்க இந்த போட்டியில் தனது பாணியில் தரமான இன்னிங்ஸ் வெளிப்படுத்தினார். ஆரம்பத்தில் அக்சர் படேல் அதிரடி காட்டிய நிலையில் இந்தியா சவாலான இலக்கு நிர்ணயித்துள்ளது.
டி20 உலகக் கோப்பை 2024ஐ யார் வெல்ல போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையே பார்போடாஸில் நடைபெற்று வருகிறது.
2007இல் முதல் முறையாக நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்று சாம்பியன் ஆனது இந்தியா. அதன் பின்னர் 2014இல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், இலங்கைக்கு எதிராக தோல்வியை தழுவி ரன்னர் அப் ஆனது.
தற்போது 10 ஆண்டுகள் கழித்து மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
தென் ஆப்பரிக்கா அணியை பொறுத்தவரை முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. எப்போதும் அரையிறுதி வரை தகுதி பெறும் அணியாக இருந்து வந்த தென் ஆப்பரிக்கா, தங்களது முந்தைய வரலாற்றை மாற்றி அமைத்து, முதல் முறையாக உலகக் கோப்பையை தன் வசமாக்கும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.
இந்தியா பேட்டிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் அடித்துள்ளது. இது டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.
அதிகபட்சமாக விராட் கோலி 76, அக்சர் படேல் 47, ஷிவம் துபே 27 ரன்கள் அடித்தார்கள். இவர்கள் தவிர மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் இரட்டை இலக்க ரன்கள் கூட அடிக்கவில்லை.
தென் ஆப்பரிக்கா பவுலர்களில் கேசவ் மகராஜ் 2, அன்ரிச் நார்ட்ஜே தலா விக்கெட்டுகளை கைப்பற்றினர். ககிசோ ரபாடா, மார்கோ ஜான்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
மோசமான தொடக்கம்
இந்திய அணிக்கும் மோசமான தொடக்கம் அமைந்தது. ரோகித் வழக்கம் போல் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்து அதிரடியுடன் தனது இன்னிங்ஸை தொடங்கினார். ஆனால் 9 ரன்னில் பவுண்டரி முயற்சியில் அவுட்டாகி வெளியேறினார். இவரை தொடர்ந்து வந்த ரிஷப் பண்ட் 2 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காத நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஒரே ஓவரில் இந்திய இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.
இதைத்தொடர்ந்து வந்த நல்ல பார்மில் இருக்கும் பேட்ஸ்மேனான சூர்ய குமார் யாதவ் 3 ரன்னில், ரபாடா பந்தில் அவுட்டானதால் 4.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் என இருந்தது. பவர்ப்ளே முடிவதற்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்திருந்தது.
கோலி - அக்சர் படேல் பார்ட்னர்ஷிப்
இந்த தொடர் முழுவதும் பேட்டிங்கில் பெரிதாக ஜொலிக்காமல் இருந்து வந்தார் விராட் கோலி. இந்த போட்டியில் பொறுமையாக பேட் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். கோலியுடன் இணைந்து அக்சர் படேல் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஒரு புறம் கோலி சிங்கிள்களாக எடுக்க, மறுபுறும் அக்சர் படேல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சிக்ஸர்களாக பறக்கவிட்டார்.
இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக பேட் செய்த அக்சர் படலே 47 ரன்கள் எடுத்து எதிர்பாராத விதமாக ரன் அவுட்டானார்.
கோலி அரைசதம்
இந்த உலகக் கோப்பை தொடரில் இரண்டு முறை மட்டும் இரட்டை இலக்கை ரன்கள் அடித்திருந்தார் கோலி. அத்துடன் இரண்டு முறை டக் அவுட் ஆகியிருந்தார். இறுதிப்போட்டியான இன்று பொறுப்புணர்ந்து பேட் செய்த கோலி அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஆமை வேக ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 48 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார்.
அதன் பிறகு தனது கியரை மாற்றிய கோலி அதிரடி மோடுக்கு மாறினார். 50 ரன்களுக்கு பிறகு சிக்ஸர் பவுண்டரி என வெளுத்து வாங்கினார். 59 பந்துகளில் 76 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தனது இன்னிங்ஸில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்தார்.
அரைசதமடித்த விராட் கோலி டி20 போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை பாபர் அசாம் உடன் சமன் செய்துள்ளார்.
டாபிக்ஸ்