MI vs RCB Result: 360 டிகரியில் வானவேடிக்கை காட்டிய SKY! ஆர்சிபி பவுலர்களை கதறவிட்ட மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள்
இஷான் கிஷன் அதிரடியான தொடக்கம், சூர்யகுமார் யாதவ் நிகழ்த்திய வானவேடிக்கையால் மும்பை இந்தியன்ஸ் 15.3 ஓவர்களிலேயே வெற்றிக்கான இலக்கை எட்டியது.
ஐபிஎல் 2024 தொடரின் 25வது போட்டி மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் 4 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் 8வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு 5 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் 9வது இடத்திலும் இருந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் பியூஷ் சாவ்லாவுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் கோபால் சேர்க்கப்பட்டார். ஆர்சிபி அணியில் கேமரூன் க்ரீனுக்கு பதிலாக வில் ஜாக்ஸ் முதல் முறையாக ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கினார். அத்துடன் செளரவ் செளகான், மயங்க் டாகர் ஆகியோருக்கு பதிலாக மகிபால் லோரோர், விஜய்குமார் வைஷாக் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
ஆர்சிபி ரன் குவிப்பு
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது.
ஆர்சிபி அணியின் கேப்டனும், ஓபனருமான டூ பிளெசிஸ் அதிகபட்சமாக 61 ரன்கள் அடித்தார். இவருக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் 53, ராஜத் பட்டிதார் 50 ரன்கள் எடுத்தனர்.
மும்பை இந்தியன்ஸ் பவுலர்களில் ஜஸ்ப்ரீத் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜெரால்ட் கோட்ஸி, ஆகாஷ் மத்வால், ஷ்ரேயாஸ் கேபால் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
மும்பை இந்தியன்ஸ் சேஸிங்
197 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் 15.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்த சீசனின் இரண்டாவது வெற்றியை பெற்றது.
மும்பை பேட்ஸ்மேன்களில் இஷான் கிஷன் 69, சூர்யகுமார் யாதவ் 52, ரோகித் ஷர்மா 38 ரன்கள் எடுத்தனர்.
ஆர்சிபி பவுலர்கள் அனைவரின் பந்து வீச்சையும் மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கி தள்ளினர். ஆகாஷ் தீப், விஜய்குமார் வைஷாக், வில் ஜாக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
இஷான் கிஷன் மிரட்டல் அடி
மும்பை இந்தியன்ஸ் ஓபனராக களமிறங்கிய இஷான் கிஷன் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை கையிலெடுத்தார். ஆர்சிபி பவுலர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 23 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து அடித்து விளையாடிய அவர் 34 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தனது இன்னிங்ஸில் 7 பவுண்டரி, சிக்ஸர்களை அடித்தார்.
சூர்யகுமார் யாதவ் வானவேடிக்கை
காயத்திலிருந்து குணமாகி முழுமையாக பிட்னஸ் ஆன பிறகு கம்பேக் கொடுத்த போட்டியில் டக் அவுட்டாகி ஏமாற்றினார் சூர்யகுமார் யாதவ். இதையடுத்து ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் பழைய சூர்யாவின் ஆட்டத்தை கட்டவிழ்த்து விட்டார். தனது பாணியில் 360 டிகரியில் வானவேடிக்க நிகழ்த்தினார். 17 பந்துகளில் அரைசதம் அடித்தார். 19 பந்துகளில் 52 ரன்கள் அடித்து அவுட்டான அவர், 5 பவுண்டரி, 4 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மாவும் தனது பங்குக்கு 38 ரன்கள் அடித்து அவுட்டானார். கேப்டன் பாண்ட்யா 3 சிக்ஸர்களுடன் 6 பந்தில் 21 ரன்கள் எடுத்து சிறிய கேமியோ ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆர்சிபி தொடர்ந்து 9வது இடத்தில் இருந்து வருகிறது.
மும்பைக்கு ஆதரவாக இருந்த அம்பயர்களின் முடிவுகள்
ஆர்சிபிக்கு எதிரான இந்த போட்டிய் அம்பயர்களின் பல முடிவுகள் தவறானவையாகவும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாகவும் இருந்தன. ஆர்சிபி அணி பேட்டிங் செய்தபோது, மும்பை வீரர் பவுண்டரி லைனுடன் தொடர்பை வைத்து பந்தை பிடித்தபோதிலும் பவுண்டரி கொடுக்கப்படவில்லை.
அதேபோல் ஆட்டத்தின் கடைசி ஓவரை பவுலிங் செய்த ஆகாஷ் மத்வால் வீசிய பந்தை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் இடுப்பு உயரத்தில் சென்ற நிலையில், ரிவுயூ செய்தபோதிலும் நோபால் கொடுக்கப்படவில்லை. இதைப்போல் அம்பயரின் சில தவறான முடிவுகள் மும்பை பக்கம் காற்று வீசுவதாக இருந்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.