IPL Throwback: ஐபிஎல் வரலாற்றில் 16 சீசன்கள் ஒரே அணி! அதிர்ச்சி தரும் கிங் கோலியின் முதல் சம்பளம் - எவ்வளவு தெரியுமா?
ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்காக தனது உடல், ஆன்மா, திறமை என அனைத்தையும் கொடுத்த வீரராக விராட் கோலி உள்ளார். ஆர்சிபி அணிக்காக தொடர்ந்து 16 சீசன்களின் விளையாடி வரும் கோலியின் அந்த அணிக்கு வந்தது எப்படி என்பதையும், அவரது முதல் சம்பளம் பற்றியை பிளாஷ்பேக்கையும் பார்க்கலாம்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2008 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் 16 சீசன்கள் முடிவடைந்துள்ளன. ஐபிஎல் 2024 தொடர் 17வது சீசனாக மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் மோதுகின்றன.
ஐபிஎல் போட்டியை திரும்பி பார்க்கையில் எண்ணற்றை சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதோடு, பல்வேறு மறக்க முடியாத சம்பவங்களும் நிகழ்வுகளும் நடந்துள்ளன. அந்த வகையில் ஒரு முறை கூட கோப்பை வெல்லாவிட்டாலும் அதிக ரசிகர்கள் கூட்டத்தையும், பாலோயர்களையும் கொண்ட அணிகளில் ஒன்றாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு உள்ளது. அதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பவர் விராட் கோலி.
16 ஆண்டுகள் ஒரே அணியில்
கிங் கோலி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் விராட் கோலி ஆர்சிபி என்று சுருக்கமாக கூறப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியில் 16 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியில் 16 ஆண்டுகள் வரை இருக்கும் ஒரே வீரராக விராட் கோலி தனித்துவ சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடங்கிய 2008இல் ஆர்சிபி அணியால் ஏலம் எடுக்கப்பட்ட கோலி, தற்போது ஐபிஎல் 2024 தொடரை விளையாட இருக்கிறார். ஆர்சிபி அணிக்காக 2013 முதல் 2021 வரை கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.
அதிர்ச்சி தரும் கோலியின் முதல் சம்பளம்
ஐபிஎல் தொடரின் முதல் தொடருக்கான ஏலத்தில் இந்தியாவை சேர்ந்த யு19 கிரிக்கெட்டர்கள் லிஸ்டில் கோலியின் பெயர் இடம்பிடித்திருந்தது. விராட் கோலியின் சொந்த ஊரான டெல்லியை அடிப்படையாக கொண்டிருந்த டெல்லி டேர்டெவில்ஸ் (இப்போது டெல்லி கேபிடல்ஸ்) அவரை ஏலத்தில் எடுக்காமல் போன நிலையில் ஆர்சிபி அணி வாங்கியது.
கோலியின் அடிப்படை ஏலத் தொகை ரூ. 10 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக ரூ. 2 லட்சம் என ரூ. 12 லட்சம் கொடுத்து வாங்கியது.
இதன் மூலம் கோலி தனது முதல் சீசனில் சம்பளமாக ரூ. 12 லட்சம் பெற்றார் என்பது அதிர்ச்சி தரக்கூடிய விஷயமாகவே இருக்கலாம். ஆனால் பின்னாள் ரூ. 17 கோடி சம்பளமாக பெற்று ஐபிஎல் தொடரில் அதிக சம்பளம் பெறும் வீரராக அவர் மாறினார் என்பது வரலாறாக அமைந்தது.
2008,2009,2010 ஆகிய மூன்று சீசன்களிலும் கோலியின் சம்பளம் ரூ. 12 லட்சம் தான். ஐபிஎல் தொடரில் களமிறங்கிய அதே 2008ஆம் ஆண்டில் தான் இந்திய அணிக்கும் அறிமுகமானார் விராட் கோலி.
விர்ரென உயர்ந்த கோலி சம்பளம்
2011ஆம் ஆண்டில் நடைபெற்ற மெகா ஏலத்தில் கோலியை தக்க வைத்துக்கொண்டது ஆர்சிபி அணி. இதற்காக அவருக்கு ரூ. 8.28 கோடி சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டது.
இதன் பின்னர் 2013இல் ஆர்சிபி கேப்டனாக பொறுப்பேற்ற கோலியின் சம்பளம் 2014 மெகா ஏலத்தில் மேலும் பல மடங்கு உயர்ந்தது. ரூ. 12.5 கோடி சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டு தக்க வைக்கப்பட்டார்.
2017இல் இந்தியா அணி டெஸ்ட், ஒரு நாள், டி20 கேப்டனாக மாறிய கோலியின் சம்பளம், 2018 மெகா ஏலத்தில் இதுவரை இல்லாத அளவில் அதிக அளவில் தக்கவைப்பு பணமாக ரூ. 17 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.
2021 சீசன் முடியும் வரை அவர் சம்பளமாக ரூ. 17 கோடி தான் பெற்றார். இதைத்தொடர்ந்து 2022இல் நடந்த மெகா ஏலத்தில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய கோலிக்கு ரூ. 15 கோடி சம்பளம் அளிக்கப்பட்டது.
தற்போது கோலியை விட அதிகமாக சம்பாதிக்கும் வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் கோலியை போல் ஒரே அணியில் 16 சீசின்களாக தனது ஆன்மா, திறமை என அனைத்தையும் அளித்த வீரர் யாரும் இல்லை என்றே கூறலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9