INDW vs ENGW: 347 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றி! இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்திய இந்திய மகளிர்
பேட்டிங், பவுலிங் என முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்திய மகளிர் அசத்தலான வெற்றியை பெற்றது. முழுமையாக மூன்று நாள் கூட முடிவடையாமல் போட்டியை முடித்துள்ளது.
இந்திய மகளிர் - இங்கிலாந்து மகளிர் இடையிலான ஒரே டெஸ்ட் போட்டி மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 428 ரன்கள் எடுத்தது.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து மகளிர், இந்திய பவுலிங்கை தாக்குபிடிக்க முடியாமல் 136 ரன்களில் சுருண்டது. இங்கிலாந்து பேட்டர்களில் நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் மட்டும் அரைசதமடித்து அதிகபட்சமாக 59 ரன்கள் எடுத்தார். இந்திய பவுலர்களில் ஆஃப் ஸ்பின்னர் தீப்தி ஷர்மா வெறும் 7 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 42 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் அடித்தது. அப்போது இந்தியா மகளிர் 478 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது.
இதையடுத்து மூன்றாவது நாளான இன்று பேட்டிங்கை தொடராமல் தனது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்து 479 ரன்களை சேஸ் செய்ய களமிறங்கியது.
மறுபடியும் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து மகளிர் பேட்டர்கள் தடுமாறினர். 27.3 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்து இங்கிலாந்து மகளிர் அணி ஆல்அவுட்டாகியுள்ளது.
இதனால் இந்திய மகளிர் 347 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்திய பவுலர்களில் தீப்தி ஷர்மா 4, பூஜா வஸ்த்ரகர் 3, ராஜேஷ்வரி கெய்க்வாட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தீப்தி ஷர்மா முதல் இன்னிங்ஸில் 5, இரண்டாவது இன்னிங்ஸில் 4 என மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன் ஆட்டநாயகி விருதையும் வென்றுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்