INDW vs ENGW 3rd T20: ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் ஆறுதல் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி
பவுலிங், பீல்டிங், பின்னர் பேட்டிங் என ஆல்ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா சுற்றுப்பயணம் வந்திருக்கும் இங்கிலாந்து மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடுகிறது.
இதில் முதல் இரண்டு டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி வென்று ஏற்கனவே தொடரை கைப்பற்றிய நிலையில், மூன்றாவது டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 126 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. இந்திய பவுலர்கள் அற்புதமாக பவுலிங் செய்த நிலையில், ஷ்ரேயன்கா பாடீல், சைகா இஷாக் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். ரோணுகா சிங், அமன்ஜோத் கெளர் ஆகியோர் தலா 2 விக்கெட்டை எடுத்தனர்.
இதைதத்தொடர்ந்து சேஸிங்கில் களமிறங்கிய இந்தியா 19 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஓபனிங் பேட்டர் ஸ்மிரிதி மந்தனா பொறுப்புடன் பேட் செய்து 48 ரன்கள் அடித்தார். அவருக்கு அடுத்தபடியாக ஜேமிமா ரோட்ரிக்ஸ் 29 ரன்கள் எடுத்தார்.
ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த இந்திய அணிக்கு இந்த வெற்றி ஆறுதல் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான ஒரே டெஸ்ட் போட்டி வரும் 14ஆம் தேதி மும்பை டிஓய் பாடீல் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்