INDW vs ENGW Test: இந்திய வீராங்கனைகள் 4 பேர் அரை சதம் அடித்து அசத்தல்: முதல் நாளில் 410 ரன்கள் குவிப்பு
Women's International Cricket: இங்கிலாந்து மகளிர் அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது. தற்போது ஒரே ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியாவுடன் மோதுகிறது.
இந்தியா-இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி நவி மும்பையில் இன்று நடந்தது. இந்திய மகளிர் அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இதையடுத்து, முதலில் இங்கிலாந்து அணி பந்துவீசியது. முதல் நாளில் இந்திய வீராங்கனைகள் இங்கிலாந்து பந்துவீச்சை நன்கு பதம் பார்த்தனர்.
சுபா சதீஷ், ஜெமிமா ராட்ரிக்ஸ், யஸ்திகா பாட்டியா, தீப்தி சர்மா ஆகிய 4 வீராங்கனைகள் அரை சதம் விளாசினர்.
இதில் தீப்தி சர்மாவை தவிர பிற வீராங்கனைகள் அனைவரும் ஆட்டமிழந்தனர். தொடக்க வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா 17 ரன்களிலும், ஷஃபாலி வர்மா 19 ரன்களிலும் ஆடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்து சுபா, ஜெமிமா நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை மூன்று இலக்கத்திற்கு உயர்த்தினர்.
சுபா சதீஷ் 69 ரன்களும், ஜெமிமா 68 ரன்களும் விளாசினர். கேப்டன் ஹர்மன் ப்ரீத் அரை சதம் எட்ட இருந்த நிலையில், 49 ரன்களில் ரன் அவுட்டானார்.
யஸ்திகா 66 ரன்களும், ஸ்னே ராணா 30 ரன்களும் விளாசினர்.
தீப்தி சர்மா 60 ரன்களுடனும், பூஜா வஸ்த்ரகர் 4 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 94 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 410 ரன்கள் குவித்துள்ளது.லாரன் பெல் 2 விக்கெட்டுகளையும், கேட் கிராஸ், நாட் சிவர்-பிரண்ட், டீன், சோபி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் இங்கிலாந்து அணிக்கு எடுத்தனர்.
நாளை இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெறும்.
டாபிக்ஸ்