INDW vs AUSW Test: ஆஸி., மகளிர் அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த இந்திய மகளிர்!
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Indw Vs Ausw Test: ஆஸி., மகளிர் அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த இந்திய மகளிர்!

INDW vs AUSW Test: ஆஸி., மகளிர் அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த இந்திய மகளிர்!

Manigandan K T HT Tamil
Dec 24, 2023 04:31 PM IST

Women's Cricket: ஷஃபாலி வர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். எனினும், ஸ்மிருதி மந்தனா நிதானமாக விளையாடி 38 ரன்கள் விளாசினார்.

வெற்றி மகிழ்ச்சியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் (PTI Photo/Shashank Parade)(PTI12_24_2023_000044A)
வெற்றி மகிழ்ச்சியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் (PTI Photo/Shashank Parade)(PTI12_24_2023_000044A) (PTI)

ஆஸி., மகளிர் அணி ஒரே ஒரு டெஸ்ட், 3 ஒரு நாள், 3 டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இந்தியாவுக்கு வந்துள்ளது. முதல் டெஸ்ட் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் கடந்த 21ம் தேதி தொடங்கியது.

ஆஸி., அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 77.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 219 ரன்களில் சுருண்டது. டஹிலா மெஹ்ராத் மட்டும் அரை சதம் விளாசினார். பூஜா, ஸ்நே ராணா ஆகியோர் முறையே 4 மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். தீப்தி 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 126.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 406 ரன்களை குவித்தது.

பின்னர், 187 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸி.,யால் 261 ரன்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை. 75 ரன்கள் எடுத்தால் வெற்றி வெற்றி என்ற எளிய இலக்குடன், கடைசி நாளான இன்று இந்திய மகளிர் அணி, 2வது இன்னிங்ஸில் களமிறங்கியது.

ஷஃபாலி வர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். எனினும், ஸ்மிருதி மந்தனா நிதானமாக விளையாடி 38 ரன்கள் விளாசினார். ரிச்சா கோஷ் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், ஜெமிமா 12 ரன்கள் விளாசினார். இவ்வாறாக 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிக் கனியை பறித்தது. முன்னதாக, 2வது இன்னிங்ஸில் ஸ்நே ராணா 4 விக்கெட்டுகளை அள்ளி ஆட்டநாயகி விருதை வென்றார்.

ஆட்டத்திற்குப் பிறகு பேசிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், "அணியில் உள்ள அனைவரும் பங்களித்தனர், அனைவரும் அணிக்காக ஆட்டத்தை வெல்ல காரணமாக இருந்தனர். எங்கள் பந்துவீச்சு பயிற்சியாளர் விக்கெட்டுகளை எப்படி எடுப்பது என்று சொல்லிக் கொடுக்கிறார். அது உண்மையில் எங்களுக்கு உதவுகிறது. முதலில் இந்த வாய்ப்பை வழங்கிய பிசிசிஐக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இரண்டாவதாக, எங்கள் தேர்வாளர்கள் அனைவரும் - அவர்கள் எங்களுக்கு சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளனர் மற்றும் ஒவ்வொரு உறுப்பினர் மீதும் நம்பிக்கையைக் காட்டியுள்ளனர்," என்று அவர் கூறினார்.

வரும் ஆண்டுகளில் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவோம் என்று இந்திய மகளிர் அணி கேப்டன் நம்பிக்கை தெரிவித்தார்.

"எல்லாம் ஒன்றாகச் செயல்படும்போது, நீங்கள் நேர்மறையான முடிவுகளைப் பெறுவீர்கள். வரவிருக்கும் ஆண்டுகளில் இன்னும் பல டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம். ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி. எல்லாம் எங்களுக்கு நன்றாகவே முடிந்தது," என்று அவர் முடித்தார்.

இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் ஆட்டம், வரும் வியாழக்கிழமை மும்பையில் வான்கடே ஸ்டேடியத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.