India vs Pakistan: மறக்க முடியாத உச்சக்கட்ட போட்டிகள், இரு அணி வீரர்களில் யார் டாப்?
இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் எப்போதுமே சுவரஸ்யம், திருப்புமுனை, பரபரப்பு ஆகியவற்றுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கு இடையே மறக்க முடியாத உச்சக்கட்ட மோதல் ஆக இருந்த போட்டிகள், இரு அணி வீரர்களில் யார் டாப் சாதனை புரிந்தவராக உள்ளார் என்பதையும் பார்க்கலாம்
உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டி நியூயார்க்கில் இன்று நடைபெற இருக்கிறது. இந்திய நேரப்படி மாலை மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
இது இவ்விரு அணிகளும் மோதிக்கொள்ளும் 13வது மோதலாக உள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டிகளில் 7 முறை இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 5 முறை இந்தியாவும், ஒரு முறை பாகிஸ்தானும், ஒரு போட்டி டையிலும் முடிந்தது.
கடந்த முறை இந்தியா வெற்றி
கடந்த 2022இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டிகள் மெல்போர்னில் நடைபெற்றன. இதில் இந்தியா த்ரில் வெற்றியை பெற்றது. ஒற்றை ஆளாக கடைசி வரை பேட் செய்த விராட் கோலி 82 ரன்கள் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். கிரிக்கெட் ரசிகர்கள் என்றென்றும் நினைவில் வைத்துக்கொள்ளும் விதமாக விராட் கோலியின் இன்னிங்ஸ் அமைந்திருந்தது.
இதைப்போல் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சில மறக்க முடியாத போட்டிகளை பார்க்கலாம்
டி20 உலகக் கோப்பை 2007 குரூப் போட்டி
டர்பனில் நடைபெற்ற இந்த போட்டி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 மோதலாக இருந்தது. பரபரப்பான இந்த ஆட்டம் டையில் முடிந்தது. இறுதியில் பவுல்-அவுட் முறையில் வெற்றியாளர் முடிவு செய்யப்பட்டனர்.
இந்த போட்டியில் பீல்டிங்கை தேர்வு செய்த பாகிஸ்தான் இந்தியாவை 141-9 என கட்டுப்படுத்தியது. பாகிஸ்தானின் இன்னிங்ஸின் முடிவில் ஸ்கோர் சமன் செய்யப்பட்ட நிலையில், பவுல் அவுட் முறையில் வெற்றியாளர்களை தீர்மானிக்க முடிவு செய்தவுடன், இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி பந்துவீச்சுக்கு பகுதி நேர வீரர்களான சேவாக், உத்தப்பா மற்றும் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங்கை தேர்வு செய்தார். அவரது இந்த தந்திரமான முடிவுக்கு பலனும் கிடைத்தது.
அதே நேரத்தில் பாகிஸ்தான் அணியில் முன்னணி பந்துவீச்சாளர்கள் யாசிர் அராபத், உமர் குல் மற்றும் ஷாகித் அப்ரிடி ஆகியோர் தங்கள் இலக்குகளை தவறவிட்டனர். இது தான் டி20 உலகக் கோப்பை போட்டியில் பவுல் அவுட் மூலம் முடிவு காணப்பட்ட ஒரே போட்டியாக அமைந்தது. இதன் பின்னர் தான் சூப்பர் ஓவர் அமல்படுத்தப்பட்டது
டி20 உலகக் கோப்பை 2007, இறுதிப் போட்டி
கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத இந்த போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. இந்தியா நிர்ணயித்த 158 ரன்களை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்தாலும், மிஸ்பா உல் ஹக்கின் நிதானமான ஆட்டம் பக்க பலமாக அமைந்தது.
ஆட்டத்தின் கடைசி ஓவரை ஜோகிந்தர் ஷர்மா வீச, கைவசம் ஒரு விக்கெட் இருக்க, 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மிஸ்பா ஒரு வைடு மற்றும் ஒரு டாட் பந்தைத் தொடர்ந்து ஒரு சிக்ஸர் அடித்தார். இதனால் 4 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது, எதிர்பாராத விதமாக ஸ்கூப் ஷாட் முயற்சித்த மிஸ்பா, ஸ்ரீசாந்த் வசம் சிக்கினார். பின் முதல் டி20 உலகக் கோப்பையை இந்தியா தன் வசமாக்கியது.
டி20 உலகக் கோப்பை 2021, குரூப் போட்டி
இந்த போட்டியில் பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடியின் முதல் ஸ்பெல் மறக்க முடியாத விதமாக உள்ளது. ரோகித் சர்மாவை முதல் பந்திலேயே டக் அவுட்டாக்கி இந்திய டாப் ஆர்டரை சீர்குலைத்து, 3-31 என்ற அற்புதமாக ஸ்பெல்லை முடித்தார்.
விராட் கோலி 57 ரன்கள் எடுத்து இன்னிங்ஸை நிலைநிறுத்த முயன்ற போதிலும், அவரும் கடைசி ஓவரில் ஷாகினிடம் வீழ்ந்தார்.
சேஸிங்கில் பாகிஸ்தான் ஓபனர்கள் முகமது ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 79 ரன்களும், கேப்டன் பாபர் அசாம் 68 ரன்களும் எடுக்க, பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மிக பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றி பாகிஸ்தான் தனது பரம எதிரி அணியாக இந்தியாவுக்கு எதிராக உலகக் கோப்பை தொடர்களில் பெற்ற முதல் வெற்றியைாக அமைந்தது.
குரூப் பிரிவு போட்டியில் தோல்விக்கு பின்னர் ஆசிய கோப்பை 2022, சூப்பர் 4
சுற்றில் இந்தியாவை மீண்டும் எதிர்கொண்டது பாகிஸ்தான் அணி.
விராட் கோலியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. இருப்பினும், பாகிஸ்தான் வீரர் நவாஸின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் வெற்றிகரமாக சேஸிங்கை முடித்தது. 20 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த நவாஸ். ஒரு பந்து மீதமிருக்க ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றிக்கு வழிநடத்தினார்.
அதிக ரன் அடித்த விராட் கோலி
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே டி20 உலகக் கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் அடித்த வீரராக இந்தியாவின் விராட் கோலி உள்ளார். இவர் 5 இன்னிங்ஸில் 308 ரன்கள் அடித்துள்ளார். இதற்கு அடுத்த நான்கு இடங்களில் பாகிஸ்தான் வீரர்களே உள்ளார்கள். இரண்டாவது இடத்தில் சோயிப் மாலிக் 5 இன்னிங்ஸில் 100 ரன்கள் எடுத்துள்ளதே அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.
அதிக விக்கெட்டுகள்
இரு அணிகளுக்கு இடையே டி20 உலகக் கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக இந்தியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் உள்ளார். இவர் 3 இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இதுவரை
2007: போட்டி டை ஆனது - பவுல் அவுட்டுக்கு பிறகு இந்தியா வெற்றி பெற்றது (கிங்ஸ்மீட், டர்பன்)
2007: இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது (தி வாண்டரர்ஸ், ஜோகன்னஸ்பர்க்)
2012: இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது (RPS, கொழும்பு)
2014: இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது (ஷேர்-இ-பங்களா, மிர்பூர்)
2016: இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது (ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா)
2021: பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது (துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்)
2022: இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது (மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்)
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்