தமிழ் செய்திகள்  /  Cricket  /  India Vs England 1st Test Live Cricket Score India Lead By 175 Runs

Eng vs Ind Test Day 2: பேட்டிங்கிலும் பட்டையைக் கிளப்பிய ஜடேஜா.. 2 வது நாள் முடிவில் இந்தியா 175 ரன்கள் முன்னிலை

Manigandan K T HT Tamil
Jan 26, 2024 05:36 PM IST

Jadeja: ஆல்-ரவுண்டர் ஜடேஜா நிதானமாக விளையாடி அரை சதம் பதிவு செய்து அசத்தினார். பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் பட்டையைக் கிளப்பியுள்ளார் ஜடேஜா.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா பந்தை விளாசிய காட்சி. (AP Photo/Mahesh Kumar A.)
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா பந்தை விளாசிய காட்சி. (AP Photo/Mahesh Kumar A.) (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 5 டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதலாவது டெஸ்ட் ஐதராபாத்தில் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. முதல் நாளில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 64.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களை எடுத்தது.

அந்த அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் மட்டுமே 70 ரன்கள் விளாசினார். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.

ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் 3 விக்கெட்டுகளையும் பும்ரா, அக்சர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

இதையடுத்து, தனது முதலாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்தியா.

இந்தியா முதல் இன்னிங்ஸ்

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 80 ரன்களிலும் கேப்டன் ரோகித் சர்மா 24 ரன்களிலும் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 23 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கே.எல்.ராகுல் நங்கூரமாய் நின்று நிதானமாக விளையாடினார். அரை சதமும் விளாசி அசத்தினார். இன்றைய ஆட்டம் அவரது 50 வது டெஸ்ட் போட்டியாகும்.

50வது டெஸ்டில் அரை சதம் அடித்து அசத்தினார் கே.எல்.ராகுல். அவர் 123 பந்துகளில் 86 ரன்கள் எடுத்திருந்தபோது டாம் ஹார்ட்லி வீசிய பந்தில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

ஆல்-ரவுண்டர் ஜடேஜா நிதானமாக விளையாடி அரை சதம் பதிவு செய்து அசத்தினார். பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் பட்டையைக் கிளப்பியுள்ளார் ஜடேஜா. இவர் 155 பந்துகளில் 81 ரன்கள் விளாசி களத்தில் உள்ளார். மொத்தம் 3 ஃபோர்ஸ் விரட்டியிருக்கிறார்.

விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் அரை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 41 ரன்கள் எடுத்திருந்தபோது எல்பிடபிள்யூ ஆகி அவுட்டானார்.

பின்னர் வந்த தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின், 1 ரன்னில் ரன் அவுட்டானார். அக்சர் படேல் 35 ரன்களுடன் ஜடேஜாவுடன் களத்தில் இருக்கிறார்.

இவ்வாறாக இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 110 ஓவர்களில் 421 ரன்களை எடுத்துள்ளது.

இங்கிலாந்தை விட 175 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது இந்தியா. நாளை 3வதுநாள் ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கும்.

இங்கிலாந்து தரப்பில், டாம் ஹார்ட்லி, ஜோ ரூட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜேக் லீச், ரெஹான் அகமது தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட்டுக்கு ஒரு விக்கெட் கூட இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2024-25 சுழற்சியில் மிகவும் முக்கியமான தொடராக இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற்றும் வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இருந்து வருகிறது. இரு அணிகளுக்கும் இந்த தொடரின் முடிவுகள் புள்ளிப்பட்டியலில் டாப் இடத்தை பிடிக்க உதவும்.

இதையடுத்து இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ஹைதராபாத்தில் ஜனவரி 25ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டி தொடங்கும் முன்னரே இந்திய அணியின் ஸ்பின் கூட்டணியான அஸ்வின் - ஜடேஜா நிகழ்த்தப்போகும் சாதனைகள் குறித்து பேச்சு எழுந்தது. அதன்படி தொடர் தொடங்குவதற்கு முன்னர் அஸ்வின் 490, ஜடேஜா 275 விக்கெட்டுகள் எடுத்திருக்கும் நிலையில் இந்த தொடரில் முறையே அவர்கள் 500, 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லலை எட்டுவார்கள் என பேசப்பட்டது.

அந்த வகையில் இந்த போட்டியின் முதல் நாளிலேயே இங்கிலாந்து 246 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல்அவுட்டானது. இதில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

WhatsApp channel

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score stay connected with HT Tamil