HBD Kiran More: முன்னாள் கேப்டன் கங்குலிக்கு வில்லனாக இருந்த கிரண் மோர்! அப்படி என்ன செய்தார்?
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Hbd Kiran More: முன்னாள் கேப்டன் கங்குலிக்கு வில்லனாக இருந்த கிரண் மோர்! அப்படி என்ன செய்தார்?

HBD Kiran More: முன்னாள் கேப்டன் கங்குலிக்கு வில்லனாக இருந்த கிரண் மோர்! அப்படி என்ன செய்தார்?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 04, 2023 05:15 AM IST

உயரத்தில் குறைவான விக்கெட் கீப்பராக இருந்தாலும் அதில் தனித்துவமான சாதனைகளை படைத்திருக்கும் கிரண் மோர், பேட்டிங்கிலும் நங்கூரமிட்டு இந்திய அணியை பல போட்டிகளில் இருந்து காப்பாற்றியுள்ளார். கங்குலியை இந்திய அணியில் இருந்து முதன்முதலாக தூக்கியதும் இவர்தான்.

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிரண் மோர்
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிரண் மோர்

1984ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் அறிமுகமான மோர், பின்னர் 1985/86இல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணியில், காயமடைந்த சயத் கிர்மாணிக்கு பதில் சேர்க்கப்பட்டார். அப்போது முதல் அணியில் தனக்கான நிலையான இடத்தை பிடித்தார்.

1986ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக கிரண் மோர் விளையாடிய முதல் டெஸ்ட் தொடர் அவருக்கு சிறப்பாகவே அமைந்தது. மூன்று டெஸ்ட் போட்டிகளில் 16 கேட்ச்கள் பிடித்து சிறந்த விக்கெட் கீப்பராக கலக்கினார்.உயரத்தில் குறைவாக இருந்தாலும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட மோர், 1988இல் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணி 63 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, அரைசதம் விளாசி அணியை மீட்டார்.

இதேபோல் பாகிஸ்தான் தொடரிலும் பாலோ ஆன் ஆவதற்கு இந்திய அணி தவித்த போது 58 ரன்கள் எடுத்தார். இந்த இரண்டு இன்னிங்ஸும் மோர் கிரிக்கெட் கேரியரில் சிறந்த இன்னிங்ஸாக அமைந்தன.

1988இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 6 பேட்ஸ்மேன்கள் ஸ்டம்பிங் மூலம் அவுட்டாக்கினார். இதில் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் 5 பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்று வரையிலும் சாதனையாகவே இருந்து வருகிறது.

1992 உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்த மோர் அணிக்கு தேவையான பங்களிப்பை அளித்தார். அதன் பின்னர் கீப்பிங்கில் தொடர்ந்து சிறப்பாக செயல்படாமல் போனதால், தனது இடத்தை இழந்தார். பரோடா மாநிலத்தை சேர்ந்த இன்னொரு விக்கெட் கீப்பர் பேட்ஸமேனான நயன் மோங்கியா, மோர் இடத்தை பிடித்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் வாய்ப்பு போன பின்னரும் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் 1998 வரை விளையாடிய மோர், 2002 முதல் 2006 வரை இந்தியா அணியில் தேர்வாளராக செயல்பட்டார். இவரது காலகட்டத்தில் இளம் கிரிக்கெட்டர்களை ஊக்குவிக்கும் விதமாக சீனியர் வீரர்களை அணியில் இருந்து நீக்கினார். அதில் முக்கிய பலிகடாவாக அப்போது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய கங்குலி சிக்கினார்.

தான் தேர்வாளராக இருக்கும் வரையில் கங்குலிக்கு அணியில் மீண்டும் இடம் கிடையாது என்பதில் உறுதியாக இருந்தார். கிரண் மோர் பதவிக்காலம் முடிந்த பிறகு, திலீப் வெங்சர்க்கார், கங்குலியை அணியில் சேர்த்து, பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் இரட்டை சதம் அடித்தது தனி கதை.

இந்தியாவுக்காக 49 டெஸ்ட், 94 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் கிரண் மோர், ஒரு முறை கூட சதமடித்தில்லை. அதே போல் ஒரு நாள் போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடித்ததில்லை. இருப்பினும் நங்கூரிமிட்டு பேட்டிங் செய்வதிலும், கீப்பிங்கிலும் வல்லவராக திகழ்ந்த மோர் இன்று தனது 61வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.