IND vs SA Final Result: மாயாஜாலம் செய்த இந்திய பவுலர்கள்! 17 ஆண்டு கால கனவு நனவானது - இரண்டாவது முறையாக சாம்பியன்
ஒரு கட்டத்தில் கிளாசன் வெளிக்காட்டிய அதிரடியால் ஆட்டம் தென் ஆப்பரிக்கா பக்கம் திரும்பியது. ஆனால் கடைசி கட்டத்தில் மாயாஜாலம் செய்த இந்திய பவுலர்கள் ஆட்டத்தால், 17 ஆண்டு கால கனவு நனவானது. டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா முறையாக இரண்டாவது சாம்பியன் ஆகியுள்ளது.
2007இல் முதல் முறையாக நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்று சாம்பியன் ஆனது இந்தியா. அதன் பின்னர் 2014இல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், இலங்கைக்கு எதிராக தோல்வியை தழுவி ரன்னர் அப் ஆனது.
தற்போது 10 ஆண்டுகள் கழித்து மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது.
தென் ஆப்பரிக்கா அணியை பொறுத்தவரை முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. எப்போதும் அரையிறுதி வரை தகுதி பெறும் அணியாக இருந்து வந்த தென் ஆப்பரிக்கா, தங்களது முந்தைய வரலாற்றை மாற்றி அமைத்து, முதல் முறையாக உலகக் கோப்பையை தன் வசமாக்கும் முனைப்பில் களமிறங்கியது.
இந்தியா பேட்டிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 76, அக்சர் படேல் 47, ஷிவம் துபே 27 ரன்கள் அடித்தனர்.
தென் ஆப்பரிக்கா பவுலர்களில் கேசவ் மகராஜ், அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ககிசோ ரபாடா, மார்கோ ஜான்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
தென் ஆப்பரிக்கா சேஸிங்
177 ரன்கள் என்ற சவாலான இலக்கை சேஸ் செய்த தென் ஆப்பரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதுடன், இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது.
தென் ஆப்பரிக்கா பேட்டிங்கில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசன் 52, குவண்டின் டி காக் 39 ரன்கள் எடுத்தார்.
இந்திய பவுலர்களில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
17 ஆண்டு கால கனவு
2007இல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை முதல் தொடரில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் பிறகு 17 ஆண்டு காலம் கழித்து மீண்டும் இரண்டாவது முறையாக வென்றுள்ளது.
கடைசியாக 2013இல் சாம்பியன்ஸ் டிராபி வென்ற பிறகு ஐசிசி கோப்பை என்பது இந்தியாவுக்கு 11 ஆண்டுகள் தண்ணி காட்டி வந்தது. இதையடுத்து தற்போது அந்த கோப்பையை தன் வசமாக்கியுள்ளது.
ஆட்டநாயகன் கோலி
லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று போட்டிகளில் பேட்டிங்கில் மொத்தமாக 100 ரன்கள் கூட கடக்காமல் இருந்த வந்த கோலி, இந்த ஒரு அற்புத இன்னிங்ஸ்க்காக தனது வித்தையை பாதுகாத்து வைத்திருந்தது போல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் உச்சகட்ட பார்மில் இருந்த வந்த கோலி, இந்தியா கோப்பை வெல்ல காரணமாக இருந்த இறுதிப்போட்டியில் அதை தொடர்ந்து அணிக்கு வெற்றியை தேடிதந்ததுடன், ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார்.
தொடர் நாயகன் விருதை இந்த தொடர் முழுவதும் தனது அச்சுறுத்தலான பவுலிங்கால் பேட்ஸ்மேன்களை மிரட்டிய ஜஸ்ப்ரீத் பும்ரா வென்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்