Ind vs Eng Result: பழிதீர்த்த இந்தியா! 10 ஆண்டுகளுக்கு பிறகு பைனலுக்கு தகுதி! பேட்டிங், பவுலிங்கில் கலக்கல் ஆட்டம்
கடந்த 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக பெற்ற தோல்விக்கு தற்போது இந்தியா பழி தீர்த்துள்ளது. பேட்டிங், பவுலிங் என கலக்கல் ஆட்டம் வெளிப்படுத்திய இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு பைனலில் நுழைந்துள்ளது.

டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கயானாவில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி நடப்பு சாம்பியன் அணியாக இருந்து வந்த நிலையில், கடந்த 2022 டி20 உலகக் கோப்பை தொடரில் இதே இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் தோல்வியை தழுவி இந்தியா வெளியேறியது. எனவே இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பதிலடி கொடுக்கும் போட்டியாகவும் இந்த அரையிறுதி அமைந்திருந்தது.
இந்தியா பவுலிங்
மழையால் மைதானத்தில் நிலவிய ஈரப்பதம் காரணமாக டாஸ் போடுவதற்கு சுமார் ஒன்றரை மணி நேரம் வரை தாமதமானது. இதன்பின்னர் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்தியா, இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் கடந்த போட்டியில் களமிறங்கிய அதே அணியுடன் இந்த போட்டியில் களமிறங்கியது.
முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ரோகித் ஷர்மா 57, சூர்யகுமார் யாதவ் 47, ஹர்திக் பாண்ட்யா 23 ரன்கள் அடித்தனர்.