தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Ind Vs Afg Result: 20 டாட் பந்துகள்..!பும்ரா அபாரம் - ஆப்கானிஸ்தானை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா

IND vs AFG Result: 20 டாட் பந்துகள்..!பும்ரா அபாரம் - ஆப்கானிஸ்தானை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 20, 2024 11:42 PM IST

பவுலிங் செய்த 24 பந்துகளில் 20 டாட் பந்துகள் வீசியதோடு 3 விக்கெட்டுகளையும் தூக்கி பவுலிங்கில் பும்ரா அபாரம் காட்டினார். சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது இந்தியா

பும்ரா அபாரம், ஆப்கானிஸ்தானை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா
பும்ரா அபாரம், ஆப்கானிஸ்தானை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா (PTI)

டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்கியுள்ளன. இந்த தொடரின் 43வது போட்டியும், சூப்பர் 8 சுற்று மூன்றாவது போட்டியாகவும் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே பார்போடாஸில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்க்கு பதிலாக ஸ்பின்னர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். அதேபோல் ஆப்கானிஸ்தான் அணியிலும் ஸ்பின் ஆல்ரவுண்டர் கரீம் ஜனத்துக்கு பதிலாக தொடக்க பேட்டரும், இடது கை ஸ்பின் பவுலருமான ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்தியா பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 53, ஹர்திக் பாண்ட்யா 32, விராட் கோலி 24 ரன்கள் அடித்தனர்.

ஆப்கானிஸ்தான் பவுலர்களில் கேப்டன் ரஷித் கான், ஃபசல் ஃபரூக்கி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். நவீன்-உல்-ஹக் ஒரு விக்கெட்டை எடுத்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

ஆப்கானிஸ்தான் சேஸிங்

இதையடுத்து 182 என்ற சவாலான இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் எடுத்தது. இதனால் இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் சூப்பர் 8 சுற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக அஸ்மதுல்ல உமர்சாய் 26, நஜிபுல்லா ஜத்ரன் 19 ரன்கள் அடித்தனர்.

இந்திய பவுலர்களில் பும்ரா, அர்ஷ்தீப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அக்‌ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

பீல்டிங்கில் கலக்கிய ஜடேஜா

இந்திய வீரர்கள் இந்த போட்டியில் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். அதிலும் ஜடேஜா மூன்று கேட்ச்களை பிடித்து அற்புதமான பீல்டிங் செய்தார். அதேபோல் பவுலிங்கிலும் 3 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.

பவுலிங்கில் பும்ரா அபாரம்

டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இந்திய அணியின் துருப்பு சீட்டாக இருந்து வரும் ஜஸ்ப்ரீத் பும்ரா, தனது துல்லிய பவுலிங்கால் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு தலைவலியை ஏற்படுத்தினார். 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 7 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர் வீசிய 24 பந்துகளில் 20 டாட் பந்துகளாகும்.

இந்தியாவின் ரன்குவிப்புக்கு காரணமாக இருந்த சூர்ய குமார் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியா தனது சூப்பர் 8 சுற்று போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஆன்டிகுவாவில் வரும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெற இருக்கிறது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.