IND vs SA 2nd Test: மாஸ் காட்டிய பவுலர்கள், வரலாறு படைத்த இந்தியா! கேப்டவுனில் முதல் வெற்றி - டெஸ்ட் தொடர் சமன்
கேப்டவுனில் இதுவரை வெற்றி பெற்றதில்லை என்கிற வரலாற்றை ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி மாற்றியுள்ளது. டி20, டெஸ்ட் தொடர் சமன், ஒரு நாள் தொடர் வெற்றி என தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாகவே முடித்துள்ளது.
இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளது.
இந்தியாவுக்கு 79 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 12 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜெயஸ்வால் 28, ரோஹித் ஷர்மா 17 ரன்கள் எடுத்தனர்.
அத்துடன் கேப்டவுன் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் விளையாடிய 6 போட்டிகளில் இதுவரை வெற்றியை பதிவு செய்யாத இந்திய அணி, ரோஹித் ஷர்மா தலைமையில் முதல் முறையாக வென்று சாதனை புரிந்துள்ளது.
பவுலர்களின் சிறப்பான செயல்பட்டால் இந்த வெற்றி இந்தியாவுக்கு இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் முகமது சிராஜ், இரண்டாவது இன்னிங்ஸில் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் தலா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தென் ஆப்பரிக்காவை அதன் சொந்த மண்ணில் 55 ரன்கள் என மிக குறைவான ஸ்கோரில் ஆல்அவுட்டாக்கியுள்ளனர்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்திருந்தது. தென் ஆப்பரிக்கா 36 ரன்கள் இந்தியாவை விட குறைவாக இருந்த நிலையில் இன்றைய நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாத தென் ஆப்பரிக்கா பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். 36.5 ஓவரில் 176 ரன்களுக்கு தென் ஆப்பரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் ஆல்அவுட்டானது.
ஜஸ்ப்ரீத் பும்ரா 6, முகேஷ் குமார் 2, சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்த போட்டியில் மொத்தமே 107 ஓவர்கள் வீசப்பட்டிருப்பதுடன், 5 செஷன், முழுவதுமாக இரண்டு நாள் கூட நிறைவடையாமல் முடிந்திருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறுகிய நாளில் நடைபெற்று முடிந்த போட்டியாக இது அமைந்துள்ளது.
தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணத்தில் முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என இந்தியா சமன் செய்தது. இதைத்தொடர்ந்து ஒரு நாள் தொடரை 2-1 என வென்றது. தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமநிலை செய்துள்ளது. இதன்மூலம் தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் இந்தியாவுக்கு வெற்றிகரமாகவே அமைந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9