IND vs SA 2nd Test Day 1: ஒரே நாளில் 23 விக்கெட்டுகள்! விரைவில் முடியும் தருவாயில் கேப்டவுன் டெஸ்ட்?
முதல் நாளிலேயே கேப்டவுனில் நடைபெற்று வரும் இந்தியா - தென் ஆப்பரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்டில் இரு அணிகளின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்த நிலையில், விரைவிலேயே முடிவு தெரியும் தருவாயில் உள்ளது.
இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பரிக்கா முதலில் பேட் செய்தது.
இந்திய பவுலர்களின் அபார பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தென் ஆப்பரிக்கா முதல் இன்னிங்ஸில் 55 ரன்களில் ஆல்அவுட்டானது. முதல் செஷன் முடிவதற்குள்ளாகவே தென் ஆப்பரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் இரண்டு பேட்ஸ்மேன்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் எடுத்தனர். முகமது சிராஜ் 6, பும்ரா மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்தியா பெரிய ஸ்கோர் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 153 ரன்களில் ஆல்அவுட்டானது. கோலி 46, ரோஹித் 39, கில் 36 ரன்கள் எடுத்தனர். அத்துடன் ஆறு பேட்ஸ்மேன்கள் டக் அவுட்டானார்கள். இருப்பினும் இந்தியா 98 ரன்கள் முன்னிலை பெற்றது.
தென் ஆப்பரிக்கா பவுலர்களில் ரபாடா, இங்கிடி, பர்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த மூவர் கூட்டணி இந்தியாவை பெரிய ஸ்கோர் குவிக்க விடாமல் கட்டுப்படுத்தியது.
இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த தென் ஆப்பரிக்கா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. தற்போதைய நிலையில் தென் ஆப்பரிக்கா 36 ரன்கள் இந்தியாவை விட குறைவாக உள்ளது.
இந்திய பவுலர்களில் இரண்டாவது இன்னிங்ஸில் முகேஷ் குமார் 2, பும்ரா 1 விக்கெட்டை எடுத்துள்ளனர். முதல் நாளிலேயே இரண்டு அணிகளும் முதல் இன்னிங்ஸை முடித்திருக்கும் நிலையில், தென் ஆப்பரிக்கா இரண்டாவது இன்னிங்ஸிலும் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதனால் இந்த போட்டி விரைவிலேயே முடிவுக்கு வர வாய்ப்பு உள்ளது.
இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்த்து மொத்தம் 23 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன. அத்துடன் 270 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளன.
கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய டீன் எல்கார் 12 ரன்னில், முகேஷ் குமார் பந்தில் அவுட்டானார். அவர் வெளியேறியபோது இந்திய வீரர்கள் அனைவரும் கைகுலுக்கி வாழ்த்தினர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்