Ind vs Eng 2nd Test Preview: முழு பலத்துடன் களமிறங்கும் இங்கிலாந்து! தனித்துவ சாதனை நிகழ்த்த போகும் அஸ்வின், பும்ரா
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Eng 2nd Test Preview: முழு பலத்துடன் களமிறங்கும் இங்கிலாந்து! தனித்துவ சாதனை நிகழ்த்த போகும் அஸ்வின், பும்ரா

Ind vs Eng 2nd Test Preview: முழு பலத்துடன் களமிறங்கும் இங்கிலாந்து! தனித்துவ சாதனை நிகழ்த்த போகும் அஸ்வின், பும்ரா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 02, 2024 05:50 AM IST

முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து முழு பலத்துடன் இரண்டாவது போட்டியிலும் விளையாட இருக்க, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல் என முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்திய அணி களமிறங்குகிறது.

பயிற்சியின்போது ரவிச்சந்திரன் அஸ்வின் - ஜஸ்ப்ரீத் பும்ரா
பயிற்சியின்போது ரவிச்சந்திரன் அஸ்வின் - ஜஸ்ப்ரீத் பும்ரா

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகபட்டினத்தில் உள்ள ஏஜிஏ-விஜிசிஏ மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ஏற்கனவே இந்த தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இதனால் இனி வரும் போட்டிகள் அனைத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இந்தியாவுக்கு இருந்து வரும் நிலையில் முக்கிய வீரர்களான விராட் கோலி, கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இல்லாமல் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.

இந்த மூன்று பேருக்கு மாற்று வீரர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர் உள்ளூர் போட்டியில் பேட்டிங்கில் நல்ல பார்மில் இருந்து வரும் சர்ப்ரஸ் கான், முதல் முறையாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல் ஆல்ரவுண்டர் செளரப் குமாரும் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஸ்பின் ஆல்ரவுண்டர் வாசிங்டன் சுந்தரும் அணியில் இடம்பிடித்துள்ளார். இருப்பினும் இவர்கள் மூவரும் ஆடும் லெவனில் இருப்பது சந்தேகம் தான்.

ஏனென்றால் கோலிக்கு பதிலாக கடந்த போட்டியிலேயே ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பிடித்திருக்கும் நிலையில், கேஎல் ராகுல் இடத்தில் ஏற்கனவே அணியில் இருக்கும் ராஜத் பட்டிதார் சேர்க்கப்படுவார் என தெரிகிறது. அதேபோல் ஜடேஜாவுக்கு பதிலாக பவுலிங்கை வலுப்படுத்தும் விதமாக குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவார் என தெரிகிறது.

இங்கிலாந்தை பொறுத்தவரை முழு பலத்துடன் இருந்து வரும் நிலையில், இன்றைய போட்டியில் களமிறங்கும் அணியை போட்டி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னரே அறிவித்தது. அதன்படி வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு பதிலாக ஜேமி ஆண்டர்சன், ஜேக் லீச்சுக்கு பதிலாக் புதுமுக ஸ்பின்னர் சோயிப் பசீர் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் போட்டியை போல் 3 ஸ்பின்னர்களுடன் இங்கிலாந்து இரண்டாவது போட்டியிலும் விளையாட இருக்கிறது.

முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங், பவுலிங்கில் சொதப்பிய இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்டது. பேட்டிங்கில் ஆலி போப் 196 ரன்கள் அடித்த மிகப் பெரிய லீட் பெற உதவினார்.

இதனால் இந்தியாவுக்கு சவாலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதை சேஸ் செய்கையில் ஸ்பின்னுக்கு நன்கு உதவிய பிட்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறி தங்களது விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தனர். இங்கிலாந்து புதுமுக ஸ்பின்னர் டாம் ஹார்ட்லி இந்திய மண்ணில் விளையாடிய முதல் போட்டியிலேயே மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுக்களை எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இந்த சூழ்நிலையில், தற்போது இங்கிலாந்து நல்ல பார்மிலும் முழு பலத்துடனும் இருக்க, மூன்று அனுபவ வீரர்கள் இல்லாமல் புதிய வீரர்களுடன் இந்தியா இரண்டாவது போட்டியில் களம் காண்கிறது

பிட்ச் நிலவரம்

ஹைதராபாத் போல் முதல் நாளிலேயே பந்து திரும்பும் வண்ணம் ஸ்பினுக்கு சாதகமாக இருக்காது எனவும், வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. வறண்ட வானிலை நிலவும் எனவும் மழைக்கு வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட் 500 விக்கெட்டுகளை வீழ்த்தும் இரண்டாவது பவுலர் என்ற சாதனை புரிவார் அஸ்வின். இதேபோல் 150 விக்கெட்டுகளை வீழ்த்த வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கும் 4 விக்கெட்டுகள்.

இங்கிலாந்து பவுலர்களில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினால் ஜேமி ஆண்டர்சன், டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை அடைவார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.