IND vs AUS 4th T20I: அதிரடி காட்டிய ரிங்கு சிங், ஜித்தேஷ்! ஆஸ்திரேலியா பவுலர்கள் கம்பேக் - இந்தியா 174 ரன்கள் குவிப்பு
ரிங்கு சிங், ஜித்தேஷ் ஷர்மா ஆகியோரின் அதிரடியால் இந்தியா அணி 174 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி இரண்டு ஓவரில் கம்பேக் கொடுத்த ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டி20 போட்டி ராய்ப்பூரில் உள்ள ஷாகித் வீர் நாரயண் சிங் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மேத்யூ வேட் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய ஓபனர்கள் நல்ல தொடக்கம் அளித்த நிலையில், மிடில் ஆர்டரில் பேட் செய்த ஜித்தேஷ் ஷர்மா, ரிங்குசிங் ஆகியோர் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
இந்திய பேட்ஸ்மேன்கள் ரிங்குசிங் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ஓபனிங் பேட்ஸ்மேன் ஜெய்ஷ்வால் 37, ஜித்தேஷ் ஷர்மா 35, ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா பவுலர்களில் பென் துவர்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்பின்னர் தன்வீர் சங்கா, இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஓபனர்களாக களமிறங்கிய ஜெயஸ்வால் - ருதுராஜ் ஜோடி இணைந்து முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்ட ஜெயஸ்வால் 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அவுட்டானார். இவர் தனது இன்னிங்ஸில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தார்.
இவருக்கு அடுத்தபடியாக பேட் செய்ய வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 8, சூர்யகுமார் யாதவ் 1 ரன் எடுத்த நிலையில் அடுத்தடுத்து அவுட்டானார்கள். இதனால் இந்திய பேட்டிங்கில் தடுமாற்றம் ஏற்பட்டது.
தொடக்கத்தில் இருந்து நிதானமாக பேட் செய்து வந்த ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் அவுட்டாகும்போது அணியின் ஸ்கோர் 13.2 ஓவரில் 111 என்று இருந்தது.
இந்த தருணத்தில் இருந்து பார்ட்னர்ஷிப் அமைத்த ரிங்கு சிங் - ஜித்தேஷ் ஷர்மா 56 ரன்கள் சேர்த்தனர். சிறப்பான கேமியோ ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜித்தேஷ் ஷர்மா, 3 சிக்ஸர், ஒரு பவுண்டரியை பறக்க விட்டு 19 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார்.
அதிரடியாக பேட் செய்து வந்த ரிங்கு சிங் ஆட்டத்தின் கடைசி ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி இரண்டு ஓவர்களில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்ததுடன், 13 ரன்கள் மட்டுமே அடித்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்