IND vs AUS 4th T20: பவுலிங்கில் மிரட்டிய அக்ஷர் படேல், பிஷ்னோய் - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா
ஸ்பின்னர்களான அக்ஷர் படேல், ரவி பிஷ்னோய் ஆகிய துல்லியமாக பந்து வீசி ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் ரன்குவிப்பதற்கு எவ்வித வாய்ப்பும் வழங்கவில்லை.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டி20 போட்டி ராய்ப்பூரில் உள்ள ஷாகித் வீர் நாரயண் சிங் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மேத்யூ வேட் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. ரிங்கு சிங் 46, ஜெஸ்வால் 37, ஜித்தேஷ் ஷர்மா 35, ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா பவுலர்களில் பென் துவர்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்பின்னர் தன்வீர் சங்கா, இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து சவாலான இந்த இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களின் அதிகபட்சமாக கேப்டன் மேத்யூ வேட் 36 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருக்கு அடுத்தபடியாக டிராவிஸ் ஹெட் 31, மேத்யூ ஷார்ட் 22 ரன்கள் எடுத்தனர்.
இந்திய பவுலர்களில் சிறப்பாக பந்து வீசிய இடது கை ஸ்பின்னர் அக்ஷர் படேல் 16 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல் மற்றொரு ஸ்பின்னரான பிஷ்னோய் 17 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.
ஓராண்டு கழித்து இந்திய அணியில் கம்பேக் கொடுத்த தீபக் சஹார் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் நடைபெறுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்