World Cup Cricket 2023: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற ஆப்கன் அணி!
ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையுடன் மோதிய ஆப்கானிஸ்தான் அணி, வெற்றி இலக்கான 45.2 ஓவரில், 242 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
மகாராஷ்டிர மாநிலம், புனேவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி டாஸ் வென்று இலங்கைக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்தார். முதலில் விளையாடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 241 ரன்களை எடுத்தது.
இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிசங்கா 46 ரன்களும், கேப்டன் குசல் மென்டிஸ் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். திமுத் கருணாரத்னே 15 ரன்களில் நடையைக் கட்டினார். சதீரா சமரவிக்ரம 36 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சரித் அசலங்கா 22 ரன்களில் கேட்ச் ஆனார். தனஞ்செய டி சில்வா (22 ரன்கள்), தீக்ஷனா (29 ரன்கள்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆப்கன் பவுலர் முஜீப் உர் ரஹ்மான் 10 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளையும், ரஷீத் கான் 10 ஓவர்களை வீசி 50 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்.
ஃபஸல்ஹக் ஃபரூக் 10 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை தூக்கினார். ஒரு மெய்டன் ஓவர் உள்பட வெறும் 34 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 242 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேஸிங் செய்தது. அதில் ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 242 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
குறிப்பாக ஆப்கன் அணியின் தொடக்க ஆட்டக்காரரான இப்ராஹிம் ஜார்டன், 39 ரன்கள் எடுத்தபோது, மதுசங்காவின் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். மேலும் ரஹ்மனுல்லா குர்பஸ், மதுசங்காவின் பந்தில் டக் அவுட் ஆனார். இதனால் ஆரம்பத்தில் சற்று தடுமாறிய ஆப்கன் அணி, ரஹ்மத் ஷாவின் வருகைக்குப் பின் நிதானத்துக்கு மாறியது. அவர் 62 ரன்களை எடுத்திருக்கும்போது, ரஜிதாவின் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பின் நான்காம் ஆட்டக்காரராக களமிறங்கிய ஆப்கன் கேப்டன் ஷகிதி 58 ரன்களுடனும், மேலும் ஐந்தாம் ஆட்டக்காரராக அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் 73 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
ரஷித்துக்குக் கிடைத்த கெளரவம்: ஆப்கன் வீரர் ரஷித் கான் தனது 100வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். ரஷித் கானுக்கு தற்போது 25 வயது ஆகிறது. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2015ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ODIஇல் 170க்கும் அதிகமான விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 100வது ஆட்டத்தில் விளையாடுவதையொட்டி, அவருக்கு ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு ஷீல்டு, 100 எண் பொதித்த ஜெர்ஸி, கேப் ஆகியவை அளிக்கப்பட்டன. இதனால், அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
டாபிக்ஸ்