Harbhajan Singh: ‘அதை பத்தி ஏன் இப்போ கேக்கறீங்க..’: ஸ்ரீசாந்த்-கம்பீர் மோதல் குறித்து ஹர்பஜன் சிங் கருத்து
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Harbhajan Singh: ‘அதை பத்தி ஏன் இப்போ கேக்கறீங்க..’: ஸ்ரீசாந்த்-கம்பீர் மோதல் குறித்து ஹர்பஜன் சிங் கருத்து

Harbhajan Singh: ‘அதை பத்தி ஏன் இப்போ கேக்கறீங்க..’: ஸ்ரீசாந்த்-கம்பீர் மோதல் குறித்து ஹர்பஜன் சிங் கருத்து

Manigandan K T HT Tamil
Dec 10, 2023 01:05 PM IST

Legends League Cricket 2023: ஸ்ரீசாந்த் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைந்தது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்ப, சட்டென்று முகம் சுளிந்தார் ஹர்பஜன் சிங்.

கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த்-கம்பீர் மோதல் குறித்து ஹர்பஜன் சிங் கருத்து
கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த்-கம்பீர் மோதல் குறித்து ஹர்பஜன் சிங் கருத்து

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக் என்ற பெயரில் கிரிக்கெட் லீக் போட்டி நடந்து வந்தது. இதில் மணிபால் டைகர்ஸ், அர்பனைசர்ஸ் ஐதராபாத், குஜராத் ஜெயன்ட்ஸ், இந்தியா கேபிட்டல்ஸ், சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ்,  பில்வாரா கிங்ஸ் ஆகிய அணிகள் பங்கு பெற்றன.

இந்தியா கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக கம்பீர் செயல்பட்டார். குஜராத் ஜெயன்ட்ஸ் அணியில் ஸ்ரீசாந்த் இடம்பெற்றிருந்தார்.

இந்த இரண்டு முன்னாள் இந்திய வீரர்களுக்கும் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளிவந்தது. இரு அணிகளும் விளையாடிய போது, இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது வீடியோவில் தெளிவாகக் காண முடிந்தது. மற்ற வீரர்களும் நடுவரும் இருவரையும் பிரிக்க வேண்டியதாயிற்று.

மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டவர் என கம்பீர் கூறிவிட்டதாக புகார் கூறியிருக்கிறார் ஸ்ரீசாந்த்.

இந்நிலையில், லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் பைனல் நேற்று நடந்தது. இதில், ஹர்பஜன் சிங் தலைமையிலான மணிபால் டைகர்ஸும், ரெய்னா தலைமையிலான அர்பனைசர் ஐதாராபாத் அணியும் மோதின.

இதில், மணிப்பால் டைகர்ஸ் வென்று சாம்பியன் ஆனது. பின்னர், ஹர்பஜன் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கம்பீர்-ஸ்ரீசாந்த் மோதல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

"பெரிய நகரங்களில், சிறிய விஷயங்கள் நடக்கின்றன," என்று அதற்கு பதிலளித்தார்.

இருப்பினும், ஐபிஎல் தொடக்க சீசனில் ஸ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் கன்னத்தில் அறைந்தது குறித்து ஒரு நிருபர் சட்டென்று கேள்வி எழுப்ப முகம் சுளித்தார் ஹர்பஜன்.

பின்னர் அவர், "அது கடந்த கால சம்பவம். அதை நாம் இப்போது கொண்டுவந்து பேச வேண்டாம். அப்போது நடந்தது சரியில்லை, தவறு என்னுடையது என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. இந்த முறை ஸ்ரீசாந்த்-கம்பீர் இடையே என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இந்தப் போட்டி தொடர் இந்த ஆண்டு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது, அதை பத்தி பேசுவது நல்லது" என்று அவர் கூறினார்.

இந்நிலையில், லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக் நிர்வாகத்தினர் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் "தவறான நடத்தை"க்கான எந்த ஆதாரமும் இருந்தால் "கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் கூறினர்.

ஸ்ரீசாந்த் வெளியிட்ட வீடியோ

முன்னதாக, "அனைவருடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. எந்தக் காரணமும் இல்லாமல் சக வீரர்கள் அனைவருடனும் எப்போதும் சண்டையிடும் 'மிஸ்டர் ஃபைட்டருக்கு' (கம்பீர்) என்ன நடந்தது என்பதைத் தெளிவுபடுத்த விரும்பினேன். விரு பாய் (சேவாக்) உட்பட தனது மூத்த வீரர்களைக் கூட அவர் மதிக்கவில்லை. இன்றும் எந்த தூண்டுதலும் இல்லாமல், அவர் என்னை மிகவும் முரட்டுத்தனமாகவும், அவர் சொல்லக்கூடாத ஒன்றையும் கூறி அழைத்தார். நான் எந்த தவறும் செய்யவில்லை," என்று ஸ்ரீசாந்த் வீடியோவில் தெரிவித்திருந்தார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.