Harbhajan Singh Apology: மாற்றுத்திறனாளிகளை கேலி செய்வதாக எழுந்த சர்ச்சை! வைரல் விடியோவுக்கு ஹர்பஜன் சிங் மன்னிப்பு
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Harbhajan Singh Apology: மாற்றுத்திறனாளிகளை கேலி செய்வதாக எழுந்த சர்ச்சை! வைரல் விடியோவுக்கு ஹர்பஜன் சிங் மன்னிப்பு

Harbhajan Singh Apology: மாற்றுத்திறனாளிகளை கேலி செய்வதாக எழுந்த சர்ச்சை! வைரல் விடியோவுக்கு ஹர்பஜன் சிங் மன்னிப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 16, 2024 02:55 PM IST

தெளபா தெளபா பாடலுக்கு இந்திய வீரர்களின் வைரல் நடன விடியோ மாற்றுத்திறனாளிகளை கேலி செய்வதாக எழுந்த சர்ச்சையால், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் மன்னிப்பு கோரியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளை கேலி செய்வதாக எழுந்த சர்ச்சை ஏற்படுத்திய வைரல் விடியோவுக்கு ஹர்பஜன் சிங் மன்னிப்பு கோரினார்
மாற்றுத்திறனாளிகளை கேலி செய்வதாக எழுந்த சர்ச்சை ஏற்படுத்திய வைரல் விடியோவுக்கு ஹர்பஜன் சிங் மன்னிப்பு கோரினார் (ANI)

இந்திய வீரர்களின் வைரல் நடன விடியோ

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் லீக் தொடர் சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா லெஜெண்ட்ஸ், பரம எதிரியான பாகிஸ்தான் லெஜெண்ட்ஸ் அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தி சாம்பியன் ஆனது.

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இணையத்தில் வைரலான தெளபா தெளபா என்ற பாடலுக்கு இந்திய லெஜெண்ட்ஸ் வீரர்கள் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுரேய் ரெய்னா ஆகியோர் நடனமாடி இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தனர்.

இந்த விடியோவில் வீரர்களின் நடனம் மாற்றுத்திறனாளிகளை கேலி செய்யும் விதமாக இருப்பதாக சர்ச்சையை கிளப்பியது. இந்திய வீரர்களின் இந்த செயலுக்கு எதிர்ப்புகளும், கணடனங்களும் குவிந்தன.

ஹர்பஜன் சிங் மன்னிப்பு

இந்த விவகாரம் தொடர்பாக ஹர்பஜன் சிங் மன்னிப்பு கோரியுள்ளார். அத்துடன் இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், "இங்கிலாந்தில் சாம்பியன்ஷிப்பை வென்ற பின்னர் சமூக ஊடகங்களில் தௌபா தௌபாவின் சமீபத்திய விடியோக்கள் மீது வரும் புகார்கள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

யாருடைய மனதையும் புண்படுத்த நோக்கில் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. ஒவ்வொரு தனிநபரையும் சமூகத்தையும் நாங்கள் மதிக்கிறோம். மேலும் இந்த விடியோவானது தொடர்ந்து 15 நாள்கள் கிரிக்கெட் விளையாடியதன் விளைவாக எங்கள் உடல் எப்படி இருக்கிறது என்பதை பிரதிபலிக்கும் விதமாகவே நாங்கள் உருவாக்கியிருந்தோம். உடல்கள் புண்பட்டிருப்பதை அப்படி குறிப்பிட்டிருந்தோம். யாரையும் அவமதிக்கவோ, புண்படுத்தவோ முயற்சிக்கவில்லை.

நாங்கள் செய்தது தவறாக இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். தயவு செய்து இந்த விஷயத்தை நிறுத்திவிட்டு அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வோம். மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள். அனைவருக்கும் அன்பை உரிதாக்குகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் உரிமை குழுக்கள் கண்டனம்

சமூக ஊடகங்களில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்த இந்திய வீரர்களின் விடியோவுக்கு பின் மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய தளம், முற்றிலும் அவமானகரமான விஷயம் என்று தெரிவித்தது. "தேசிய நாயகர்களாக கருதப்படுபவர்களின் இத்தகைய நடத்தை கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற இழிவான நடவடிக்கைகள் அவர்களின் மொத்த உணர்வற்ற தன்மையையும், முரட்டுத்தனத்தையும் மட்டுமே வெளிப்படுத்துகின்றன" எனவும் கூறப்பட்டது.

போலீசில் புகார்

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் அர்மான் அலி, இந்த விடியோவை கவனத்தில் கொள்ளுமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பி.சி.சி.ஐ) கோரிக்கை விடுத்தார்.

"இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மாற்றுத்திறனாளிகளை கேலி செய்வது அருவருப்பாக இருக்கிறது. வெகுஜனங்களால் போற்றப்படுபவர்களின் வெட்கக்கேடான மற்றும் கொடூரமான நடத்தையாக இது அமைந்துள்ளது. இதை பிசிசிஐ உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என கூறியுள்ளார். அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரங்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.