Gujarat Titans: விபத்தில் சிக்கிய குஜராத் டைட்டன்ஸ் வீரர்! மருத்துவமனையில் அனுமதி
ஐபிஎல் 2024 சீசனுக்கு ரூ. 3.60 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் வீரர் ராபின் மின்ஸ் எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ராபின் மின்ஸ் தனது கவாசகி சூப்பர் பைக்கில் சென்றபோது, மற்றொரு பைக் மீது மோதி விபத்தில் சிக்கியுள்ளார். இந்த தகவலை மின்ஸ் தந்தை உறுதிபடுத்தியுள்ளார். தற்போது காயங்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருககும் நிலையில், அவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாக தகவல்கள் தெரிவக்கின்றன .
சாலையில் பைக்கிள் செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்த ராபின் மின்ஸ், மற்றொரு பை மீது மோதியுள்ளார். காயங்கள் ஏற்பட்டபோதிலும் பயப்படும் அளவுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ராபின் மின்ஸ் தந்தை பிரான்சிஸ் மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் ராபின் மின்ஸ் ஓட்டி சென்ற பைக்கின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்திருக்கிறது. அதேபோல் மூட்டு பகுதியில் அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 வயதாகும் ராபின் மின்ஸ், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற மினி ஏலத்தில் ரூ. 3.60 கோடி கொடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியினரால் வாங்கப்பட்டார். இவரை ஏலம் எடுப்பதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதிய குஜராத் டைட்டன் பெரும் தொகையை செலுத்தி இவரை எடுத்துள்ளது.
யார் இந்த ராபின் மின்ஸ்?
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 21 வயதாகும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார் ராபின் மின்ஸ். முதல் தர போட்டிகளில் விளையாடி வரும் இவர், ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கும் முதல் பழங்குடியின வீரராக உள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்னர் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில், ராபின் மின்ஸ் தந்தையை ராஞ்சியில் உள்ள விமான நிலையத்தில் வைத்து சந்தித்துள்ளார். இந்தியா - இங்கிலாந்து இடையே நான்காவது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு புறப்படும்போது இந்த சந்திப்பானது நிகழ்ந்துள்ளது.
ஐபிஎல் 2024
ஐபிஎல் 2024 சீசன் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. குஜராத் அணி தனது முதல் போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்த போட்டி மார்ச் 24ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்