Legends League Cricket: ஆடுகளத்தில் கம்பீர்-ஸ்ரீசாந்த் திடீர் வாக்குவாதம்-வைரலாகி வரும் வீடியோ
இந்தியா கேபிடல்ஸ் இப்போது 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெறும் குவாலிஃபையர்ஸ் II இல் மணிபால் டைகர்ஸை சந்திக்கும்.
இந்தியா கேபிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் இடையேயான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் (எல்எல்சி) போட்டியின் போது கவுதம் கம்பீர் மற்றும் ஸ்ரீசாந்த் இடையே புதன்கிழமை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வியாழன் காலை, இந்த இரண்டு முன்னாள் இந்திய வீரர்களுக்கும் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளிவந்தது. கௌதம் கம்பீர், இந்தியா கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடினார். குஜராத்துக்காக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது வீடியோவில் தெளிவாகக் காண முடிந்தது. மற்ற வீரர்களும் நடுவரும் இருவரையும் பிரிக்க வேண்டியதாயிற்று.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஸ்ரீசாந்த் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. முன்னாள் இந்திய வீரர் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும், பல ஆண்டுகளாக தனது தொடக்க வீரராக இருந்த வீரேந்திர சேவாக் போன்ற மூத்த அணி வீரர்களை கம்பீர் மதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
"அனைவருடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. எந்தக் காரணமும் இல்லாமல் சக வீரர்கள் அனைவருடனும் எப்போதும் சண்டையிடும் 'மிஸ்டர் ஃபைட்டருக்கு' என்ன நடந்தது என்பதைத் தெளிவுபடுத்த விரும்பினேன். விரு பாய் (சேவாக்) உட்பட தனது சொந்த மூத்த வீரர்களைக் கூட அவர் மதிக்கவில்லை. இன்றும் எந்த தூண்டுதலும் இல்லாமல், அவர் என்னை மிகவும் முரட்டுத்தனமாகவும், அவர் சொல்லக்கூடாத ஒன்றையும் கூறி அழைத்தார். நான் எந்த தவறும் செய்யவில்லை," என்று ஸ்ரீசாந்த் வீடியோவில் கூறினார்.
"திரு கவுதம் என்ன செய்தார், விரைவில் தெரியும். கிரிக்கெட் மைதானத்தில் அவர் கூறிய வார்த்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. தயவுசெய்து ஆதரவு தாருங்கள், நானும், எனது மாநிலமும், குடும்பமும் இவ்வளவு கஷ்டங்களை சந்தித்துள்ளோம், உங்கள் ஆதரவுடன் நான் அந்த போராட்டங்களை நடத்தியுள்ளேன். நான் எனது சிறந்ததை விளையாட்டில் கொடுக்க முயற்சி செய்கிறேன்" என ஸ்ரீசாந்த் கூறினார்.
போட்டிக்கு வரும்போது, கம்பீர் (51) அரைசதம் மற்றும் பென் டங்க் (30), பாரத் சிப்லி (35) ஆகியோரின் ஆட்டத்தால் இந்தியா கேப்பிடல்ஸ் 20 ஓவர்களில் 223/7 ரன்களை எடுத்தது. 224 ரன்களை விரட்டியதில், குஜராத் அணிக்கு கிறிஸ் கெய்ல் (84), கெவின் ஓ பிரையன் (57) ஆகியோரின் பெரிய பங்களிப்பு கிடைத்தது, ஆனால் சில சிறந்த டெத் பவுலிங்கால் குஜராத்தை 12 ரன்களில் வீழ்த்த முடிந்தது.
இந்தியா கேபிடல்ஸ் இப்போது 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெறும் குவாலிஃபையர்ஸ் II இல் மணிபால் டைகர்ஸை சந்திக்கும்.
டாபிக்ஸ்