Dean Elgar: தொடங்கிய இடத்திலேயே முடிவு! ஓய்வை அறிவித்தார் தென் ஆப்பரிக்கா முன்னாள் டெஸ்ட் கேப்டன்
தென் ஆப்பரிக்காவின் முன்னாள் கேப்டன் டீன் எல்கார் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பரிக்கா அணியில் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் டீன் எல்கார். 36 வயதாகும் எல்கார் தனது அணிக்காக 86 டெஸ்ட் போட்டிகளில் 12 ஆண்டுகள் விளையாடியுள்ளார். இடது கை பேட்ஸ்மேனான இவர் நிதானம், அதிரடி என இரு வகையான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி அணிக்கு பல வெற்றிகளை தேடி தந்துள்ளார்.
இதையடுத்து இந்தியாவுக்கு எதிராக உள்ளூரில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தெரிவித்துள்ளார். இந்த தகவலை கிரிக்கெட் தென் ஆப்பரிக்கா உறுதிபடுத்தியுள்ளது.
"கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது எனது கனவுகளில் ஒன்றாக இருந்து வந்தது. அதிலும் நாட்டுக்காக பங்களிப்பை அளித்தது சிறப்பான விஷயம். அதை 12 ஆண்டுகள் வரை சர்வதேச அளவில் செய்ததை பாக்கியமாக கருதுகிறேன். இது ஒரு சிறப்பான பயணமாக இருந்ததுடன், அதை நிறுத்தி கொள்ள விரும்புகிறேன்.
அனைத்து நல்ல விஷயங்களும் முடிவுக்கு வரும் என கூறுவது போல், இந்தியாவுக்கு எதிரான தொடர் தான் எனது கடைசி தொடர். ஒரு அழகான விளையாட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். இந்த விளையாட்டு எனக்கு பல விஷயங்களை தந்துள்ளது. கேப்டவுன் நகரில் நடைபெறும் டெஸ்ட் போட்டி தான் எனது கடைசி ஆட்டம். உலகில் எனக்கு மிகவும் பிடித்தமான மைதானம். அந்த மைதானத்தில் தான் நியூசிலாந்துக்கு எதிராக முதல் ரன் அடித்தேன், அங்கு தான் கடைசி ரன்களும் அடிப்பேன் என நம்புகிறேன்" என ஓய்வு குறித்து எல்கார் குறிப்பிட்டுள்ளார்.
எல்கார் தனது கிரிக்கெட் கேரியரில் 5,146 ரன்கள் அடித்துள்ளார். தென் ஆப்பரிக்கா கிரிக்கெட்டில் அதிக ஸ்கோர் அடித்த எட்டாவது வீரராக உள்ளார். தற்போதைய நிலையில் 7வது இடத்தில் இருக்கும் மார்க் பவுச்சரை விட 352 ரன்கள் குறைவாக உள்ளார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதை முறியடிப்பாரா என்பதை பொறுத்திருந்த பார்க்க வேண்டும்.
2012இல் தென் ஆப்பரிக்கா அணியில் அறிமுகமான எல்கார், 13 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிராக மட்டும் 3 சதங்கள் அடித்துள்ளார். டூ பிளெசிஸ் விடுப்பு காரணமாக சென்றபோது தென் ஆப்பரிக்கா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் எல்கார்.
2021 முதல் தென் ஆப்பரிக்கா அணியின் முழு நேர டெஸ்ட் கேப்டனாக மாறிய எல்கார், வெஸ்ட் இண்டீஸ், இந்தியாவுக்கு எதிரான உள்ளூர் டெஸ்ட் தொடரை வென்றார். அதேபோல் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை டிரா செய்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்