IND vs Eng 1st Test: இங்கிலாந்து அணி அறிவிப்பு! கழட்டிவிடப்பட்ட ஆண்டர்சன் - பவுலர்கள் யாரெல்லாம் இருக்கிறார்கள்?
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஜேமி ஆண்டர்சன் அணியில் இடம்பெறவில்லை. ஒரே வேகப்பந்து வீச்சாளராக மார்க் வுட் மட்டுமே உள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்திருக்கும் இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நாளை நடைபெறுகிறது. போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு நாள் கூட முழுவதுமாக இல்லாத நிலையில், இங்கிலாந்து அணி முதல் போட்டியில் விளையாட இருக்கும் பிளெயிங் லெவனை அறிவித்துள்ளது.
இதில் இங்கிலாந்து அணி அனுபவ வேகப்பந்து வீச்சாளரான ஜேமி ஆண்டர்சன் இடம்பெறவில்லை. இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னுக்கு சாதமாக இருப்பதை கருத்தில் கொண்டு, இங்கிலாந்து தனது முதல் போட்டியிலேயே மூன்று ஸ்பின்னர்களுடன் களமிறங்குகிறது.
அதன்படி லெக்பிரேக் பவுலர் ரெஹான் அகமது, இடது கை ஆர்த்தோடாக்ஸ் ஸ்பின்னர்களான டாம் ஹார்ட்லீ, ஜேக் லீச் ஆகியோர் இங்கிலாந்து அணியில் ஸ்பின்னர்களாக உள்ளார்கள். இதுதவிர டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ஜோ ரூட், ஆஃப் ஸ்பின் பார்டைம் பவுலராக உள்ளார். அந்த வகையில் இங்கிலாந்து அணி நான்கு ஸ்பின்னர்களை கொண்டுள்ளது.
மார்க் வுட் மட்டும் ஒரே வேகப்பந்து வீச்சாளராக இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்தாலும், அவரது எக்ஸ்பிரஸ் வேகம், ரிவர்ஸ் ஸ்விங் வீசும் விதம் நீச்சயம் அணிக்கு பக்க பலமாக இருக்கும் என கருதப்படுவதாக அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். இதற்கிடையே மார்க் வுட் முதல் முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருப்பதால் அவர் மீது எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் ஸ்பின் பவுலர்களை பொறுத்தவரை ஜேக் லீச் மட்டுமே இதற்கு முன்னர் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளார்.
கடந்த 2021 இந்திய சுற்றுப்பயணத்தின்போது, அகமதாபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கியது. டாம் ஹார்ட்லீ, ரெஹான் அகமது ஆகியோர் முதல் முறையாக இந்திய மைதானங்களில் விளையாட இருக்கிறார்கள்.
இங்கிலாந்து கடைசியாக கடந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஓவலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்த போட்டியில் இடம்பெறாத பென் ஸ்டோக்ஸ், ஆலி போப் ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் களமிறங்குகிறார்கள்.
இங்கிலாந்து அணி மற்றொரு ஸ்பின்னராக ஷோயிப் பசீர் சேர்க்கப்பட்டுள்ளார். விசா தாமதம் காரணமாக அவர் இந்தியாவுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் சர்ரெயில் பிறந்த பசீர், இங்கிலாந்து பாஸ்போர்ட்டை வைத்திருந்தாலும், பாகிஸ்தானை பூர்விகமாக கொண்டிருப்பதால், இந்தியாவுக்கு வருவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி விவரம்:
ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் போக்ஸ் (விக்கெட் கீப்பர்), ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லீ, மார்க் வுட், ஜேக் லீச்
இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் ஜனவரி 25இல் தொடங்கி மார்ச் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் போட்டி ஹைதராபாத்தில் நடைபெறும் நிலையில், அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகள் விசாகபட்டினம், ராஜ்கோட், ராஞ்சி, தரம்சாலா ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இளம் வீரர் துருவ் ஜுரல் அறிமுக வீரராக அணியில் இடம்பிடித்துள்ளார்.
டாபிக்ஸ்