Don Bradman: ’ஆஷஷ் தொடரில் 974 ரன்கள்’ டான் பிராட்மேன் நினைவுநாள் இன்று!
”1930ஆம் ஆண்டு ஆஷஷ் தொடரில் 974 ரன்கள் குவித்தார் பிராட்மேன். 93 ஆண்டுகள் ஆகியும் அந்த சாதனை இன்னும் யாராலும் வீழ்த்த முடியவில்லை”
கிரிக்கெட் உலகில் ஜாம்பாவன் என்று அழைக்கப்படும் பிராட்மேனின் சாதனைகள் காலம் முழுக்க நிலைத்து நிற்பவையாக உள்ளது. டொனால்ட் ஜார்ஜ் பிராட்மேன் ஆகஸ்ட் 27, 1908 அன்று ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் பிறந்தார். பவுரலில் வளர்ந்த பிராட்மேன், கிரிக்கெட்டின் மீது ஆரம்பகால ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டார். அவரது அற்புதமான திறமை விரைவில் உள்ளூர் பயிற்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
வேகபந்து வீசுவதில் நீ பிஸ்தாவாக இருக்கலாம், பந்தை சுழலச்செய்வதில் நீ புயலாக இருக்கலாம், ஆனால் என்னை பொறுத்தவரை நீங்கள் வீசும் பந்து பவுண்டரியை தாண்டுமே தவிர, என்னை தாண்டி செல்லாது என பிராட்மேனின் பேட் உரையாடல் நிகழ்த்திக்கொண்டு செயல்படுவதுபோல் ரன் மெஷினாகவே செயல்பட்டார்.
எந்தவொரு பந்து வீச்சாளருக்கும் சிறிது அளவில் கூட அச்சத்தை வெளிப்படுத்தாமல், 1928 முதல் 1948 வரை என சர்வதேச கிரிக்கெட் விளையாடிய 20 ஆண்டுகளும் உலக கிரிக்கெட் வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். இதன் காரணமாகவே கிரிக்கெட் உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களாகவும், முன்னாள் வீரர்களாகவும் இருக்கும் சச்சின் டென்டுல்கர், பிரெயின் லாரா ஆகியோரால் மிகவும் ஈரக்கப்பட்டார்.
1930ஆம் ஆண்டு ஆஷஷ் தொடரில் 974 ரன்கள் குவித்தார் பிராட்மேன். 93 ஆண்டுகள் ஆகியும் அந்த சாதனை இன்னும் யாராலும் வீழ்த்த முடியவில்லை. தனது கிரிக்கெட் கேரியரில் மொத்தம் 52 டெஸ்டுகள் விளையாடி 6, 996 ரன்கள், 99.94 சராசரியுடன் எடுத்துள்ளார் பிராட்மேன். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்படியொரு சராசரியை யாரும் எடுத்ததில்லை.
அதேபோல் இங்கிலாந்து எதிராக 37 டெஸ்ட் போட்டிகளில் தோன்றியிரு்ககும் பிராட்மேன், 5,028 ரன்கள் எடுத்துள்ளார். மொத்தமாக தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 29 சதமும், 13 அரைசதமும் அடித்துள்ளார்.
பிராட்மேன் 100 ரன்கள் அடித்தால் போதும், அந்தப் போட்டியில் எப்பாடுபட்டாதவது இரட்டை சதம் அடித்துவிடுவார். அந்த வகையில் அதிகமாக இரட்டை சதம் அடித்தவர்களில் முதல் இடத்தில் உள்ளார் பிராட்மேன்.
ஒரேநாளில் முச்சதம் அடித்த பேட்ஸ்மேனாக திகழ்பவர் பிராட்மேன். 1930இல் லீட்ஸ் நகரில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஆட்டம் தொடங்கிய பிறகு 11 பந்துகள் வீசப்பட்ட நிலையில் பேட் செய்ய வந்த பிராட்மேன், அன்றைய நாள் ஆட்டம் முடிவதற்குள் முச்சதம் விளாசி கடைசி வரை 309 ரன்கள் தனியொரு ஆளாக எடுத்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் கோலி, ஸ்மித் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆனால் இவர்கள் இருவரும் இதுவரை பிராட்மேன் நிகழ்த்திய சாதனையை முறியடிக்கவில்லை.
1000 ரன்கள் 13வது இன்னிங்ஸில் அடித்த அவர், 22வது இன்னிங்ஸில் 2000, 33வது இன்னிங்ஸில் 3000, 48வது இன்னிங்ஸில் 4000, 56வது இன்னிங்ஸில் 5000, 68 வது இன்னிங்ஸில் 6000 ரனகள் எடுத்து அதிகவேகமாக முதல் 6000 ரன்கள் எடுத்த பெருமையை பெற்ற பேட்ஸ்மேனாக உள்ளார்.
தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 618 பவுண்டரிகளை அடித்துள்ள பிராட்மேன், மொத்தமாக 6 சிக்ஸர் மட்டுமே அடித்துள்ளார். அதில் 5 சிக்ஸர்கள் இங்கிலாந்துக்கு எதிராகவும், ஒரு சிக்ஸர் இந்தியாவுக்கு எதிராகவும் அடித்திருக்கிறார். அதே 6.66 இன்னிங்ஸுக்கு ஒரு முறை அரைசதம் அடித்திருக்கும் பிராட்மேன் 12 முறை இரட்டை சதம் அடித்துள்ளார்.
கிரிக்கெட் உலகில் பல்வேறு அரிய சாதனைகளை புரிந்த, கிரிக்கெட் உலகின் பிதாமகனாக விளங்கியுள்ளார் பிராட்மேன். விவன் ரிச்சர்ட்ஸ், வீரேந்தர் சேவாக், ஆடம் கில்கிறிஸ்ட் போன்ற வீரர்களின் அதிரடி ஆட்டத்துக்கு அடிப்படை ஆதாரமாகவும், நிழலாகவும் இருந்தது பிராட்மேன் பேட்டிங் ஸ்டைல் என்றால் அது மிகையாகாது.
இன்னும் கிரிக்கெட் உலகில் முறியடிக்கப்படாத பல சாதனைகளை நிகழ்த்திய டான் பிராட்மேன் தனது 92வது வயதில் உடல்நல குறைவு காரணமாக பிப்ரவரி 25ஆம் தேதி மறைந்தார். அவர் மறைந்தாலும் கிரிக்கெட் விளையாட்டு தனது பெயரை என்றைக்கும் மறக்காதவாறு ஏராளமான சாதனைகளை நிகழ்த்திவிட்டு சென்றுள்ளார்.
டாபிக்ஸ்