Eng vs Ind 4th Test Preview: தொடரை தட்டித் தூக்க குறிவைக்கும் இந்தியா: இங்கிலாந்து அணியில் 2 மாற்றங்கள்
IND-ENG 4th Test Preview in Tamil: முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்ற நிலையில், அடுத்த 2 டெஸ்ட்களில் இந்தியா ஜெயித்திருக்கிறது. இன்று 4வது டெஸ்ட் தொடங்குகிறது
இந்தியா-இங்கிலாந்துக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்ற நிலையில், அடுத்த 2 டெஸ்ட்களில் இந்தியா ஜெயித்திருக்கிறது. இன்று 4வது டெஸ்டில் ஜெயித்தால் இந்தியா 5 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரை கைப்பற்றிவிடும்.
ஆனால் தங்கள் ஆக்ரோஷமான ஆட்ட பாணியை நிலைநிறுத்த விரும்பும் இங்கிலாந்து அணிக்கு எதிராக சமயோஜிதமாக செயல்பட்டால் மட்டுமே அது கைகூடும் என்பது கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்து.
ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் பின்தங்கியிருப்பது இங்கிலாந்துக்கு சற்று பின்னடைவாக இருந்தாலும், இனறைய போட்டியில் மீண்டு வருவதற்கு தேவையான உத்திகளை தீட்டத் தொடங்கியிருக்கும்.
தொடரின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு அவரது பணிச்சுமையை நிர்வகிக்க இன்றைய போட்டிக்கு ஓய்வளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
முகமது ஷமி கணுக்கால் காயம் காரணமாக தொடரைத் தவறவிட்ட நிலையில், இப்போது இந்தியாவின் வேகப்பந்து தாக்குதலை வழிநடத்தும் பொறுப்பு முகமது சிராஜுக்கு உள்ளது. ஆகாஷ் தீப் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2012 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான தோல்விக்குப் பிறகு சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட இழக்காத இந்தியா, சுழற்பந்து வீச்சு மூலம் அதிக தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐதராபாத்தில் நடந்த தொடக்க டெஸ்டில் தொடையில் காயமடைந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் இன்னும் குணமடையவில்லை, ஆனால் ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது டெஸ்டில் சர்ஃபராஸ் கான் அறிமுகமானது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை ஆறுதலடையச் செய்தது. நீண்ட காலமாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி அசத்திவந்த அவருக்கு விடிவு காலம் பிறந்தது. அவரும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரை சதம் விளாசி தனது இருப்பை கச்சிதமாக தக்க வைத்திருக்கிறார்.
ராஜ்கோட்டில் அறிமுகமான விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் சரளமாக 46 ரன்கள் எடுத்து தான் பேட்டிங்கிலும் சோடை போகமாட்டேன் என்பதை நிரூபித்தார்.
இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இளம் வீரர்கள் மிகவும் புத்திசாலிகள், இது எங்களுக்கு ஒரு சிறந்த செய்தியாக இருக்கிறது. நிச்சயமாக, எங்கள் உள்நாட்டு கிரிக்கெட் மிகவும் வலுவானது, தரமான வீரர்கள் மட்டுமே வருகிறார்கள். நாங்கள் சில முக்கிய வீரர்களை இழக்கிறோம், ஆனால் ஒரு உள்ளூர் தொடர் எப்போதும் இளம் திறமைகளுக்கு பழக்கமான சூழ்நிலைகளில் விளையாடுவதற்கும் அணியில் தங்களை நிலைநிறுத்துவதற்கும் ஒரு நல்ல வாய்ப்பாகும்.” என்றார்.
ஆக்ரோஷமான அணுகுமுறை
ராஜ்கோட்டில் 434 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இங்கிலாந்து, மார்க் உட் மற்றும் ரெஹான் அகமது ஆகியோருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஆல்லி ராபின்சன் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீர் ஆகியோரைக் கொண்டு வந்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் அதிதீவிர ஆக்ரோஷமான அணுகுமுறை குறித்து ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர், இது பொறுப்பற்ற தன்மையாக சிலர் கருதி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
டாபிக்ஸ்