Can vs Ire Result: அயர்லாந்து சொதப்பல் பேட்டிங் - பவுலிங்கில் கெத்து காட்டிய கனடா முதல் வெற்றி - யாருக்கு டாப் இடம்?
குறைவான ஸ்கோர் எடுத்திருந்த போதிலும் பவுலிங்கில் கெத்து காட்டிய கனடா டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்திய அயர்லாந்து இரண்டாவது தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துக்கு சென்றது.
டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் 13வது போட்டி கனடா - அயர்லாந்து அணிகளுக்கு இடையே நியூயார்க்கில் நடைபெற்றது. குரூப் ஏ பிரிவு போட்டியான இதில் கனடா தனது முதல் போட்டியில் யுஎஸ்ஏ அணிக்கு எதிராக தோல்வியுற்று இருந்தது. அதேபோல் அயர்லாந்து அணியில் தனது முதல் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோல்வியடைந்தது. இந்த இரு அணிகளும் முதல் வெற்றியை நோக்கி களமிறங்கின.
பேட்டிங்கில் தடுமாறிய கனடா
இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து கேப்டன் பால் ஸ்டிர்லிங் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த கனடா அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் பேட் செய்த நிக்கோலஸ் கீர்த்தன் 49, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் மோவ்வா 37 ரன்கள் அடித்தனர்.
அயர்லாந்து பவுலர்களில் கிரேக் யங், பேரி மெக்கார்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மார்க் அடெர், கரீத் டெலானி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
அயர்லாந்து சேஸிங்
138 என்ற குறைவான இலக்கை விரட்டிய அயர்லாந்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 12 ரன் வித்தியாசத்தில் கனடா அணி நடந்து வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக மார்க் அடெய்ர் 34, ஜார்ஜ் டாக்ரெல் 30 ரன்கள் அடித்தார்கள். கனடா பவுலர்களில் ஜெர்மி கார்டன், டிலன் ஹேலிகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். ஜுனைத் சித்திக், சாட் பின் ஜாபர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
புள்ளிப்பட்டியலில் யார் டாப்
இந்த போட்டியின் முடிவுக்கு பின்னர் கனடா அணி 2 போட்டிகளில் ஒரு வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. குரூப் ஏ பிரிவில் 2 போட்டிகள் விளையாடியிருக்கும் அயர்லாந்து இரண்டிலும் தோல்வியை தழுவி கடைசி இடத்தில் உள்ளது.
விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கும் யுஎஸ்ஏ அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடர் விளையாடும் யுஎஸ்ஏ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
ஒரு போட்டி விளையாடி வெற்றியை பதிவு செய்திருக்கும் இந்தியா இரண்டாவது இடத்திலும், ஒரு போட்டி விளையாடி தோல்வியை தழுவியிருக்கும் பாகிஸ்தான் நான்காவது இடத்திலும் உள்ளது.
குரூப் ஏ பிரிவின் அடுத்த போட்டி, உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் இடையே வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. நியூயார்க்கில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 8 மணிக்கு தொடங்குகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்