HT Cricket Special: பந்து தாக்கியதால் பறிபோன இந்திய வீரர் உயிர்! கண் இமைக்கும் நொடியில் நடந்த சம்பவம் - மறக்க முடியுமா?
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ht Cricket Special: பந்து தாக்கியதால் பறிபோன இந்திய வீரர் உயிர்! கண் இமைக்கும் நொடியில் நடந்த சம்பவம் - மறக்க முடியுமா?

HT Cricket Special: பந்து தாக்கியதால் பறிபோன இந்திய வீரர் உயிர்! கண் இமைக்கும் நொடியில் நடந்த சம்பவம் - மறக்க முடியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 02, 2024 07:00 AM IST

இந்திய அணிக்காக டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் 1986 முதல் 1998 காலகட்டத்தில் விளையாடியவர் ராமன் லம்பா. ஓபனிங் பேட்ஸ்மேனாக திகழ்ந்த லம்பா சிறந்த பீல்டராகவும் இருந்துள்ளார்.

அயர்லாந்து கிளப் போட்டியில் பீல்டிங்கில் ராமன் லம்பா
அயர்லாந்து கிளப் போட்டியில் பீல்டிங்கில் ராமன் லம்பா

உத்தரபிரதேசம் மாநிலம் மீருட் நகரை சேர்ந்த லம்பா, இந்தியாவுக்காக மட்டுமில்லாமல், அயர்லாந்து அணிக்காக அதிகாரப்பூர்வமற்ற போட்டிகளில் விளையாடிய வீரராகவும் உள்ளார் . உள்ளூர் கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய லம்பாவுக்கு தேசிய அணியில் வாய்ப்பு கிடைத்தது.

1986ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற தொடரில் அறிமுகமானார். முதல் தொடரிலேயே தனது திறமையை நிருபித்தார் லம்பா. விளையாடி 6 போட்டிகளில் ஒரு சதம், இரண்டு அரைசதம் விளாசியதுடன் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

ஆனால் இதுவே அவரது முதலும் கடைசியுமான சிறந்த ஆட்டமாக அமைந்தது. இந்த தொடருக்கு பின் பார்மை இழந்த தவித்த லம்பா, அணியில் தேர்வாவதும், கழட்டிவிடப்படுவதுமாக இருந்தார்.

ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமான அதே ஆண்டில் டெஸ்ட் தொடரிலும் அறிமுகமானார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் ஜொலிக்க தவறிய லம்பா, 4 போட்டிகளுடன் வாய்ப்பை இழந்தார்.

சர்வதேச போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், உள்ளூர் கிரிக்கெட்டில் ராஜாவாகவே வலம் வந்தார். இந்தியாவுக்காக விளையாட வாய்ப்பு கிடைக்காதபோதிலும் அயர்லாந்து அணி கிளப் போட்டிகளில் விளையாடி வந்தார். இவை அதிகாரப்பூர்வமற்ற போட்டிகளாக அமைந்தன.

அயர்லாந்து போல், வங்கதேசத்திலும் கிளப் போட்டிகளில் விளையாடி வந்தார் லம்பா. அப்போது தான் அந்த கோர சம்பவம் நிகழ்ந்தது.

கடந்த 1998, பிப்ரவரி 20ஆம் தேதி வங்கதேச கிளப் போட்டி ஒன்றில் இடது கை ஸ்பின்னர் ஓவரில் முதல் மூன்று பந்து முடிந்த பின்னர் எஞ்சிய 3 பந்துகளை வீசுவதற்கு முன் பீல்டிங் அணி கேப்டன் பீல்டிங்கில் மாற்றம் செய்தார். பேட்ஸ்மேனுக்கு அருகே ஷார்ட் லெக் பீல்டராக லம்பாவை நிற்க வைத்தார். அப்போது அவரிடம் ஹெல்மெட் அணியவும் அறிவுறுத்தப்பட்டது.

பீல்டிங்கில் உடல் அசைவுகளை விரைவாக வெளிப்படுத்தும் லம்பா, 3 பந்துதானே சமாளித்து விடலாம் என்று கூறியிருக்கிறார். அப்போது ஷார்ட் பந்தை பவுலர் வீச, முழு பலத்துடன் பேட்ஸ்மேன் பந்தை அடித்துள்ளார்.

கண் இமைக்கும் நேரத்தில் லம்பாவின் தலையின் முன்பகுதியில் பந்து பட்டு திரும்ப அதை விக்கெட் கீப்பர் பிடிக்க கேட்ச் முறையில் பேட்ஸ்மேன் அவுட்டானார். லம்பா தவிர மற்ற பீல்டர்கள் விக்கெட்டுக்கான கொண்டாட்டத்தில் ஈடுபட, அவரோ மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.

பின் சில நிமிடங்களுக்கு பிறகு எழும்பிய லம்பா, பெவிலியன் திரும்பியுள்ளார். அங்கு அவருக்கு முதலுதவி அளித்த பின்னரும் சில நிமிடம் கழித்து உடல்நிலை சரியில்லை களமிறங்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவர் சுயநினைவை இழக்க உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மூளையில் இடது பகுதியில் ரத்தம் உறைந்து கிடந்ததை நீக்கினர். டெல்லியில் இருந்து ஸ்பெஷலிஸ்ட் வரவழைக்கப்பட்ட நிலையில், லம்பாவின் உடல்நிலையை பரிசோதித்தார். பின்னர் லம்பா குணமாவதற்கான சாத்தியகூறுகள் இல்லை என தெரிவித்த நிலையில், காயமடைந்த 3 நாள்களுக்கு பிறகு குடும்பத்தாரின் அனுமதியுடன் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த மருத்துவ உதவி நிறுத்தப்பட்டது. அவரது உயிரும் பந்து பட்டதால் ஏற்பட்ட காயம் காரணமாக பிரிந்தது.

இந்த சம்பவத்துக்கு பின் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், "ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் இதுபோன்ற துயரங்களைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க இது ஒரு பாடமாக உள்ளது" என தெரிவித்தார்.

இந்தியாவுக்காக விளையாடிய போட்டியில் கவனத்தை ஈர்க்கும் விதமாக பங்களிப்பை வழங்கிய லம்பா, அயர்லாந்து, வங்கதேசம் போன்ற நாடுகளின் கிரிக்கெட் வளர்ச்சிக்கும் சர்வதேச அனுபவம் பெற்ற வீரர் என்கிற ரீதியிலும் பாடுபட்டார்.

இந்திய கிரிக்கெட்டில், லம்பாவின் மறைவு மோசமான நிகழ்வாகவே இன்று வரையிலும் இருந்து வருகிறது. இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் ஹீரோவாகவும், சர்வதேச அளவில் போற்றுதலுக்குரிய வீரராகவும் இருந்து வந்த ராமன் லம்பாவின் பிறந்தநாள் இன்று.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.