தமிழ் செய்திகள்  /  Cricket  /  Birthday Article Of Former Indian Cricket Captain Mohammad Azharuddin

HBD Mohammad Azharuddin: கிரிக்கெட்டில் OUT! அரசியலில் NOT OUT! முகமது அசாரூதின் Birthday Special…!

Kathiravan V HT Tamil
Feb 08, 2024 06:40 AM IST

”அசாரூதினுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை சட்டவிரோதமானது என 2012ஆம் ஆண்டு ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தாலும், அப்போது அவருக்கு 49 வயதாகி இருந்ததால் ஆடுகளத்திற்கு குட் - பை செல்லிவிட்டு அரசியலில் களமிறங்கி இருந்தார்”

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முகமது அசாரூதின் பிறந்தநாள் இன்று
முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முகமது அசாரூதின் பிறந்தநாள் இன்று

ட்ரெண்டிங் செய்திகள்

”அறிமுகமே ஹார்டிக் சதம்”

1984ஆம் ஆண்டு கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானதன் மூலம் அசாரூதினின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. அறிமுகமான முதல் போட்டி மட்டுமின்றி அடுத்த 2 டெஸ்ட்களிலும் சதம் அடித்ததன் மூலம் உலகில் ஒருசில கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமே சொந்தமான சாதனையான ’ஹார்டிக்’ சதம் என்ற உயரத்தை பெற்றார்.

”இன்றும் நினைவு கூறப்படும் மணிக்கட்டு ஸ்ட்ரோக்”

ஜாகீர் அப்பாஸ், கிரெக் செப்பல் மற்றும் குண்டப்பா விஸ்வநாத் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை போலவே இவரும் தனது மணிக்கட்டு ஸ்ட்ரோக்குகளுக்காக இன்னும் நினைவுகூறப்படுகிறார்.

1990ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் தனது ஆக்ரோஷ ஆட்டத்தால் 120 ரன்களை குவித்ததன் மூலம் இந்தியாவின் வலுவான மிடில் ஆர்டரை உலகிற்கு உணர்த்தினார். வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமில்லாமல் ஸ்லிப் கார்னர் மற்றும் அவுட் ஃபீல்டி பகுதிகளில் சிறந்த பீல்டராகவும் தனது திறமையை முகமது அசாரூதின் பலநேரங்களில் வெளிப்படுத்தி உள்ளார்.

”90’களின் நம்பிக்கை நாயகன்”

1990ஆம் ஆண்டு பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு தலைமைத் தாங்கும் வாய்ப்பை அசாரூதின் பெற்றார். 90’களின் பெரும்பாலான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை ஏற்று வெற்றிகரமான கேப்டனாக அசாரூதின் வழிநடத்தினார்.

103 ஒருநாள் போட்டிகளிலும், 14 டெஸ்ட் போட்டிகளிலும் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தி வெற்றியை தேடித்தந்த அசாரூதின், இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6,215 ரன்களையும், 334 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9,378 ரன்களையும் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 22 சதங்களையும் ஒருநாள் போட்டிகளில் 7 சதங்களையும் அடித்துள்ள அசாரூதின் ஒருநாள் போட்டிகளில் பந்துவீசியதன் மூலம் 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார்.

”சூதாட்ட புகாரில் க்ளீன் போல்ட்”

90’கள் முழுக்க உச்சத்தில் இருந்த முகமது அசாரூதினின் வாழ்க்கை 2000ஆம் ஆண்டில் பாதாளத்திற்கு சென்றது.

மேட்ச் பிக்சிங்கில் முகமது அசாரூதின் ஈடுபட்டதாக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் ஹன்சி குரோன்ஜேவின் குற்றச்சாட்டு அவரது கிரிக்கெட் வாழ்க்கையை கபளீகரம் செய்தது.

இது குறித்து சிபிஐ வெளியிட்ட விசாரணை அறிக்கை அசாரூதினின் கிரிக்கெட் கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதனால் கிரிக்கெட் விளையாட அசாரூதினுக்கு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது.

”அரசியலில் இரண்டாம் இன்னிங்க்ஸ்”

அசாரூதினுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை சட்டவிரோதமானது என 2012ஆம் ஆண்டு ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தாலும், அப்போது அவருக்கு 49 வயதாகி இருந்ததால் ஆடுகளத்திற்கு குட் - பை செல்லிவிட்டு அரசியலில் களமிறங்கி இருந்தார்.

தன்னை கடந்த 2009ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டதன் மூலம் அசாரூதின் வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்க்ஸ் தொடங்கியது.

உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார் அசாரூதின். பின்னர் 2019ஆம் ஆண்டில் ஹைதராபாத் கிரிக்கெட் அசோஷேன் தேர்தலில் போட்டியிட்டு அதன் தலைவராகவும் முகமது அசாரூதின் உள்ளார். தெலங்கானாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஜுப்ளி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பையும் முகமது அசாரூதின் இழந்திருந்தாலும் தொடர்ந்து அரசியலில் பயணித்து வருகிறார். 

WhatsApp channel

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score stay connected with HT Tamil