MS Dhoni: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்! கெளதம் கம்பீர் - தோனி இடையே மீண்டும் உருவாகும் போட்டி
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கெளதம் கம்பீர் நியமிக்கப்படலாம் என பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், எம்எஸ் தோனி அதற்கான சிறந்த தேர்வாக இருப்பார் என விராட் கோலியின் சிறு வயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா தெரிவித்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் மீண்டும் போட்டி உருவாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ காலக்கெடு ஐபிஎல் 2024 முடிந்த ஒரு நாள் கழித்து மே 27 (திங்கள்கிழமை) முடிவடைந்தது.
இந்த அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் யாரும் அணுகப்படவில்லை என பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும் பயிற்சியாளர் பதிவிக்கு விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் குறித்து ரகசியம் காக்கப்பட்டு வருகிறது.
மீண்டும் இந்திய பயிற்சியாளர்
தற்போது பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட்டுக்கு அடுத்தபடியாக மீண்டும் ஒரு இந்தியரே இந்திய அணியின் பயிற்சியாளராக மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கெளதம் கம்பீர் பெயர் அடிபட தொடங்கியது.
அத்துடன், ஐபிஎல் போட்டியில் கெளதம் கம்பீர் வழிகாட்டியாக செயல்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக சாம்பியன் ஆன நிலையில், கம்பீரை இந்திய பயிற்சியாளராக நியமிக்க குரல்கள் வலுத்தன. அதற்கு ஏற்றார் போல் கம்பீரும், பிசிசிஐ நிர்வாகிகளுடன் சந்திப்பு நிகழ்த்தினார் எனவும் தகவல்கள் வெளியாகின.
தோனி சிறந்த தேர்வு
இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா, எம்எஸ் தோனியை இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
துரோணாச்சார்யா விருது பெற்ற பயிற்சியாளரான இவர், "இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு எந்த பெயர்கள் பொருந்தும் என்பதைப் பார்ப்பதே சுவாரஸ்யமான விஷயமாக உள்ளது. பயிற்சியாளர் யாராக இருந்தாலும் அவர் இந்தியராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
மகேந்திர சிங் தோனி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டால், அவர் ஒரு நல்ல தேர்வாக இருக்க முடியும். அவர் ஏராளமான கிரிக்கெட்களை விளையாடி இருப்பதுடன், பல பெரிய போட்டிகளை வென்றுள்ளார்" என்று கூறினார்.
தோனி தனது ஐபிஎல் ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஐபிஎல் 2024 தொடர் அவருக்கு கடைசி சீசனாக இருக்கலாம் என கருதப்பட்டாலும், அவர் இன்னும் சில மாதங்கள் கழித்து சொல்வேன் என்று யூகத்தை கிளப்பிவிட்டு சென்றுள்ளார். இதற்கிடைய தோனி விளையாடும் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாத்ன், தோனி மற்றொரு சீசன் விளையாடலாம் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தோனிக்கு மரியாதை
இந்திய அணிக்கு தோனி பயிற்சியாளராக இருந்தால், டிரெஸ்ஸிங் ரூமில் அவருக்கு மரியாதை இருக்கும். அவர் இரண்டு உலகக் கோப்பை கோப்பைகளை இந்தியாவுக்கு வென்று கொடுத்துள்ளார். தோனி அனைத்து விஷயங்களையும் நன்றாக நிர்வகித்தார் என்ற பயிற்சியார் ராஜ்குமார் ஷர்மா தெரிவித்துள்ளார்.
“தோனி கேப்டனாக ஆனபோது, சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ராகுல் டிராவிட், ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே, கெளதம் கம்பீர் மற்றும் யுவராஜ் சிங் போன்ற பெரிய வீரர்கள் அந்த அணியில் இருந்தனர். இருப்பினும் தோனி அணியை அற்புதமாக கையாண்டார்” என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த 2021இல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் எம்எஸ் தோனி இந்திய அணியின் வழிகாட்டியாக செயல்பட்டார்.
மீண்டும் கம்பீர் - தோனி போட்டி
தோனிக்கு முதல் முறையாக கேப்டன்சி வழங்கியபோது, சீனியர் வீரர்களான யுவராஜ் சிங், வீரேந்தர் சேவாக் ஆகியோரை ஒதுக்கியதாக அப்போது அணியின் இருந்த ஓபனரான கம்பீர் கருத்து தெரிவித்தார். அதன் பிறகு தோனியுடன் பல்வேறு விஷயங்களில் போட்டி போடுபவராக இருந்த கம்பீர், மோதல் போக்கையே கடைப்படித்தார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தோனி மீதான விமர்சனங்களை கம்பீர் தொடர்ந்து முன் வைத்து வந்தார். தற்போது இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் பெயரில் கம்பீர் பெயர் பரிந்துரையில் இருந்து வரும் நிலையில், தோனியின் பெயரும் முன்மொழியப்பட்டிருப்பது இருவருக்கும் இடையே மீண்டும் போட்டியை உருவாக்கியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்